ஒரு நாட்டின் நடவடிக்கைகள் இருநாடுகளுக்கு இடையிலான மோதலில் நேரடித் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்றால் கண்ணை மூடிக்கொண்டு அது அமெரிக்கா என்று சொல்லிவிடலாம்... முன் தீர்மானத்தோடு ஒரு வல்லரசை இப்படி அணுகுவது சரியா என்று உங்களுக்குத் தோன்றலாம்.. ஆனால், அமெரிக்காவின் கடந்த கால செயல்பாடுகள் அதைத்தான் உணர்த்துகின்றன. உலகளவில் மிகப்பெரிய சக்தியாக திகழும் அமெரிக்காவின் செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் அத்தனை எளிதில் புறந்தள்ளக்கூடியவை அல்ல.
இஸ்ரேலும் ஈரானும் நடத்தி வரும் போர் 6வது நாளை எட்டியுள்ளது. உயிரிழந்தவர்களில் 90%பேர் பொதுமக்கள் என்றால் அதன் தாக்கம் பாமர மக்களை எவ்வளவு பாதித்துள்ளது என்பதை சொல்லித் தெரியவேண்டியது இல்லை. ஆம், இஸ்ரேல் தொடர்ச்சியாக மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகிறது.
இந்தப் போரின் முக்கிய நோக்கம் என்ன? ட்ரம்பின் அமெரிக்க அரசாங்கத்திற்கும், நெதன்யாகுவின் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கும் இலக்கு என்பது ஒன்றுதான்.. அது.. இஸ்லாமிய குடியரசான ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது.. அணு ஆயுதம் உருவாக்கும் நிலையை அவர்கள் அடைந்துவிடக்கூடாது.
நிதி மற்றும் ஆயுதங்களின் மூலம் ஈரான் உதவிபுரியும் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் - இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராக செயல்படும் சூழலில் - ஈரான் அணு ஆயுத நாடாகவும் மாறினால் அது இஸ்ரேலுக்கு பேராபத்தாக முடியும் என்பது இஸ்ரேலின் வாதம். எனவே, ஈரான் அணு ஆயுத நாடாக மாறக்கூடாது. ஆனால், அதை செயல்படுத்தும் வழிமுறைகளில்தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் வேறுபடுகின்றன..
அமைதி, பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் என வெள்ளைக்கொடியை தூக்கிக்கொண்டு அமெரிக்கா வருகிறது என்றால் போர் விமானங்களும், ஏவுகணைகளும் மட்டும்தான் பதில் என இஸ்ரேல் கூறுகிறது. நெதன்யாகு ஒருபடி மேலேபோய் ஈரான் ஆட்சியையே ஆபத்தில் ஆழ்த்தக்கூடிய மிகப்பெரிய திட்டத்தை தயாரித்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.. அமெரிக்கா உதவினாலும், உதவாவிட்டாலும் தனியாக அதைச் செய்வதற்கு நெதன்யாகு தயாராகிவிட்டார் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நெதன்யாகு ஈரான் மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த நிலையில், பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதித்துவிடலாம் எனக்கூறி நெதன்யாகுவின் முயற்சியை ட்ரம்ப் தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இம்முறை நெதன்யாகுவைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்து கொண்டது. போரைத் தேர்ந்தெடுத்த இஸ்ரேலின் முடிவு அமெரிக்காவுக்கு முன்னதாகவே தெரியும் என்ற பார்வை இருக்கிறது. அமெரிக்காவின் உளவு நிறுவனங்கள் மற்றும் நாட்டின் அரசியல் தலைவர்களிடையே நடந்த ஆலோசனைக் கூட்டங்களின் வழியே அமெரிக்கா இதை ஏற்கெனவே உறுதிப்படுத்திக்கொண்டது.
சுருக்கமாக, அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இலக்கு என்பது ஒன்றுதான்... வழிமுறைகள் மட்டும்வேறு. ஆனால், ட்ரம்ப் விரும்பிய ஒப்பந்தத்திற்கு ஈரானும் ஒப்புக்கொள்ளவில்லை, நெதன்யாகுவும் செவிசாய்ப்பதுபோல் தெரியவில்லை. இருந்தபோதும், இஸ்ரேலின் பாதுகாப்பு முக்கியமா? அல்லது போர் அமைதியாக முடிவுக்கு வருவது முக்கியமா? என அமெரிக்க அதிபரிடம் நீங்கள் கேட்டால் நிச்சயமாக, இஸ்ரேல் பாதுகாப்பு என்றே தெரிவிப்பார்.
நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பதிலே அதற்கு உதாரணம்... ட்ரம்ப் தன் ஜி 7 பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு ஒரு நாள் முன்னதாகவே அமெரிக்கா திரும்பினார். விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போர் நிறுத்தப்பட வேண்டும் என்று மட்டும் நான் நினைப்பதாகக் கூறவில்லை. அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கையை ஈரான் முழுமையாகக் கைவிட வேண்டும்.. உண்மையான முடிவு வேண்டும்.. ஈரானிடம் அணுசக்தி இருக்கக்கூடாது” என்று பேசியிருந்தார். அதாவது, ஈரானிடம் ட்ரம்ப் எதிர்பார்ப்பது நிபந்தனையற்ற சரணடைதலை.
இதுதொடர்பாக தனது ட்ரூத் சோசியலிலும் ட்ரம்ப் தொடர்ச்சியாக பதிவுகளை எழுதி வருகிறார். நேற்று கூட கொமேனி குறித்து பதிவிட்டிருந்த ட்ரம்ப், "உச்சத்தலைவர் என அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும் எனத் தெரிவித்திருக்கிறார். அவர் எங்களுக்கு எளிதான இலக்கு எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப் நாங்கள் இப்போதைக்கு அவரை வெளியில் கொண்டு வரவோ அல்லது கொல்லப்போவதோ இல்லை எனத் தெரிவித்திருக்கிறார். மேலும், ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்களும் தற்காப்பு உபகரணங்களும் இருக்கலாம்.. ஆனால், அமெரிக்காவின் ஆயுதங்களுடன் அதை ஒப்பிட முடியாது" என தெரிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட ட்ரம்ப் செய்தது பகீரங்க மிரட்டல்...
ஏற்கெனவே, டெஹ்ரானில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இப்போரில் ஈரானால் வெல்ல முடியாது என்றும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அவர்கள் முன்வரவேண்டும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப்பைத் தொடர்ந்து இஸ்ரேலும் டெஹ்ரானில் உள்ளவர்கள் வெளியேற வேண்டும் என எச்சரித்துள்ளது. இதனால் டெஹ்ரானிலுள்ள 10 மில்லியன் மக்கள் வீடுகளில் இருப்பதா அல்லது டெஹ்ரானை விட்டே வெளியேறுவதா என்ற அச்சத்திலுள்ளனர். அப்படியே வெளியேறினாலும்,, அமைதி நிலவி மக்கள் மீண்டும் வரும்போது அவர்களது வீடுகள் இருக்குமா என்பதும் தெரியவில்லை. கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் நாட்டிலேயே அகதிகளாக மாறக்கூடிய சூழல் எழுந்துள்ளது.
ஈரானிய அணுசக்தி நிலையங்களை முழுமையாக தகர்க்க அமெரிக்க ராணுவ தளவாடங்களைப் பயன்படுத்தும் யோசனையில் ட்ரம்ப் இருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. பேச்சுவார்த்தைக்கு பலமுறை முயன்றும் பலன் தராத நிலையில், தாக்குதலில் நேரடியாக ஈடுபடுவது குறித்து ட்ரம்ப் பரீசிலித்து வருகிறார். வெள்ளை மாளிகையில் இதுதொடர்பாக ஆலோசனையும் நடந்திருக்கிறது. ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் நீடித்த இந்த ஆலோசனையில், ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்க அமெரிக்கா இஸ்ரேலுடன் சேர வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ட்ரம்பின் நெருங்கிய ஆலோசகர்கள் இதற்கு உடன்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவிடம் தொடர்பு கொண்டு ட்ரம்ப் பேசியிருக்கிறார்.. ஆனால், என்ன பேசினார்கள் என்பது குறித்து குறித்தான தகவல்கள் வெளிவரவில்லை.
அப்படி தாக்குதலுக்கு அமெரிக்கா தயாராகும் பட்சத்தில் அவர்களது முதல் இலக்கு ஈரானின் ஃபோர்டோவிலுள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டல் மையமாக இருக்கலாம். மிக முக்கியமாக, நிலத்தடியில் இருக்கும் யுரேனியம் செறிவூட்டல் மையத்தை அழிக்கும் குண்டு அமெரிக்கர்களிடம் மட்டுமே இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்த அணுசக்தி நிலையத்தை அழிக்க 30 ஆயிரம் பவுண்டுகள் எடையுள்ள GBU-57 Massive Ordnance Penetrator குண்டுகளுடன் அமெரிக்க விமானங்களை அனுப்ப ட்ரம்ப் யோசித்து வருகிறார்.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா ராஜதந்திர ரீதியில் இஸ்ரேலுக்கு உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இஸ்ரேலிய உயரதிகாரிகளுக்கு இருப்பதாகவும் தெரிகிறது.. ஏனெனில் இதுவரை அமெரிக்கா ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலைப் பாதுகாத்துள்ளது.. ஆனால், நேரடியாக போரில் பங்குகொள்ள மறுத்துவிட்டது .
தாக்குதல் நடந்துள்ள இந்த ஐந்து நாட்களில் ட்ரம்பின் நிலைப்பாடு தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. அமெரிக்கா முதலில் தாக்குதலில் இருந்து விலகி இருந்தது.. பின் இஸ்ரேலின் ஆரம்ப வெற்றி உறுதியானதும் பகீரங்கமாக ஆதரவளித்தது... தற்போது போரில் இறங்க ஆலோசிப்பதாக செய்திகள் வருகின்றன. என்ன நடக்கிறது? அமெரிக்கா போரில் இறங்குமா? இறங்கினால் என்ன நடக்கும்? காலம் தான் பதில் சொல்லும்!!!