ஹிஸ்புல்லா, இஸ்ரேல் எக்ஸ் தளம்
உலகம்

போர் நிறுத்தத்தை மீறி மீண்டும் வான்வழி தாக்குதலை நடத்திய இஸ்ரேல்! லெபனான் சொல்வதென்ன?

போர் நிறுத்தத்திற்குப் பிறகு லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.

Prakash J

இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்னை பல தசாப்தன்களாக நீடித்து வருகிறது. இதில் சமீபத்திய திருப்பமாக கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் (பாலஸ்தீன ஆதரவு) நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது.

இஸ்ரேல் - லெபனான் போர்

இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தப் போரில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை, அங்கு 3,961 பேர் கொல்லப்பட்டு இருப்பதாகவும், 16,520 பேர் காயமடைந்து உள்ளதாகவும் அந்த நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் நடந்துள்ள இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு நற்செய்தி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். இதை, உலக நாடுகள் பலவும் வரவேற்றிருந்தன. இந்தியாவும் வரவேற்றிந்ததது. அதேநேரத்தில், ”ஹிஸ்புல்லா மீண்டும் வாலாட்டினால், இஸ்ரேல் பொறுத்திருக்காது” எனவும் அந்நாடு எச்சரித்திருந்து.

இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும் இதனால், தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் வேண்டுமென்றே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளது. மேலும், போர் காரணமாக நாட்டைவிட்டு, மீண்டும் தங்கள் பகுதிக்கு திரும்பி வருகிறார்கள். அவர்களை தடுக்கும் வகையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது என ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

போர்நிறுத்த விதிமுறைகளின்கீழ், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேற 60 நாட்கள் வரை ஆகலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், இஸ்ரேலியப் படைகள் வெளியேறிவிட்டால், மீண்டும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஊடுருவி தங்களை அழிக்கலாம் என்பதையே இஸ்ரேல் படைகள் இன்னும் வெளியேறாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.