மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டிவிடுவதாக அல்ஜசீரா தொலைகாட்சி மீது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அந்நாட்டில் அல்ஜசீரா அலுவலகங்களை மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டிலுள்ள அல்ஜசீரா தொலைக்காட்சியின் அலுவலகங்களை மூடுவதற்கு அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ அல்ஜசீரா தொலைக்காட்சி மக்களிடையே உணர்ச்சிகளை தூண்டிவிடுவதாக கூறியிருந்தார். ஜெருசலேம் நகரில் சமீபத்தில் நேர்ந்த மோதல்களில் அத்தொலைக்காட்சியின் பங்கு இருந்ததாக பிரதமர் நேதான்யாஹூ ஜூலை 27 ஆம் தேதி கூறியதோடு அதை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் கூறினார். மேலும் அல்ஜசீரா இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகியவற்றின் முக்கிய கருவியாக செயல்படுகிறது என்றார். இதன் காரணமாக இரண்டு காவலர்கள் இறந்து போனார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இஸ்ரேலின் அண்டை நாடுகளான சவூதி அரேபியா, எகிப்து போன்றவற்றில் அல்ஜசீரா தொலைகாட்சி தடை செய்யப்பட்டுள்ளன. மத தீவிரவாதத்தை அல்ஜசீரா தூண்டுகிறது என்பதாலேயே அதன் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்நாட்டு அரசுகள் தெரிவித்துள்ளன. அல்ஜசீரா தொலைக்காட்சியில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் அடையாள அட்டைகளை பறிமுதல் செய்வதோடு கேபிள், சாட்டிலைட் தொடர்புகளையும் நீக்க வேண்டும் என்று இஸ்ரேல் தகவல் தொடர்புத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.