israel war
israel war pt desk
உலகம்

காஸா நகரை சுற்றி வளைத்து தாக்கத் தயாராகும் இஸ்ரேல்...!

webteam

இரவு முழுவதும் கேட்கும் ராக்கெட் குண்டுகளின் சப்தம்.. காஸாவின் ஒவ்வொரு இரவையும் அச்சமூட்டும் ஒன்றாக மாற்றிக்கொண்டிருக்கிறது. இருளுக்கும், பகலுக்கும் வித்தியாசம் காண முடியாத அளவுக்கு தொடரும் ராக்கெட் தாக்குதல்களால் அதிர்ந்து கொண்டிருக்கும் காஸா, அடுத்த கட்ட அதிர்ச்சியை சந்திக்க தயாராகிக் கொண்டிருக்கிறது. காஸாவை முற்றிலும் சுற்றிவளைத்துள்ள இஸ்ரேல் படைகள், 48 மணி நேரத்திற்குள் காஸாவுக்குள் ஊடுருவி விடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காஸா- இஸ்ரேல் போர்

ஹமாஸ் ஆட்சிக்கு உட்பட்ட காஸா பகுதியில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி ஒருமாதமாகி விட்டது. இதுவரை 9,700க்கும் அதிக பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 15 லட்சத்துக்கும் அதிக பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகளாகியிருக்கிறார்கள். போரில் 23 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உடனடி மருத்துவ உதவிக்காக காத்திருப்பதாக ஐநா மற்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

காஸாவில் மனிதாபிமான உதவிகளை வழங்க வசதியாக போரை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் பரிந்துரையை இஸ்ரேல் நிராகரித்துள்ளது. ஞாயிறு இரவு முழுவதும் 450 நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஹமாசை சேர்ந்த ஜமால் மூசா என்பவரை கொன்றதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. இவர் 1993 ஆம் ஆண்டு காஸாவில் இஸ்ரேல் வீரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

gaza strip

ஒரு வாரத்துக்கு முன் தரைப்படைத் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கிய நிலையில், இதுவரை 30 இஸ்ரேலிய தரைப்படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். போர் நடக்கும் காலத்தில் 3 ஆவது முறையாக ஞாயிறன்று காஸாவில் இணைய சேவை நிறுத்தப்பட்டது. 36 மணிநேரம் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

மனிதாபிமான உதவிகளுக்காக போர் நிறுத்தம் செய்யக்கோரும் அமெரிக்கா, மத்தியக் கிழக்குப்பகுதியில் தனது அணுஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை நிறுத்தியுள்ளது. அணுஆயுதங்கள், அணுகுண்டுகள் மற்றும் இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடிய குண்டுகளை ஏந்திச் செல்லக்கூடிய இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், மத்தியக் கிழக்கில் நிறுத்தப்பட்டிருப்பது அங்குள்ள பதற்றத்தை அதிகரித்துள்ளது.