gaza war x page
உலகம்

உலகின் மனசாட்சியை உலுக்கும் காஸா.. நூற்றாண்டு கண்டிராத பேரழிவு.. செவி சாய்க்காத இஸ்ரேல்!

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்திருக்கின்றன. பேரழிவை நிறுத்துங்கள் என்று பல நாடுகளும் இஸ்ரேலிடம் கோருகின்றன. ஆனால், இஸ்ரேலின் மனசாட்சியை எந்த குரலும் உலுக்கவில்லை.

PT WEB

ஹமாஸை அழிப்பதாகக் கூறி காஸாவை முழுமையாக நிர்மூலமாக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். காஸா நகரைத் தரைமட்டமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது.

பேரழிவு என்ற வார்த்தை காஸாவில் அர்த்தம் இழந்துவிட்டது. அங்கிருந்து வெளியாகும் காட்சி, உலகின் மனசாட்சியை உலுக்குகின்றன. சிலருக்கு கை இல்லை... சிலருக்கு கால் இல்லை... சிலரின் முகமே சிதைந்திருக்கிறது... உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்து இல்லை... கண் முன்னே குழந்தை பசியில் துடிக்கிறது... ஒரு தகப்பன் தன் மகளுக்கு கடைசி கவளம் உணவை ஊட்டிவிட்டு கண்ணீருடன் தன் பசியை மறக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை இடுபாடுகளுக்குள் தேடி ஓடிக்கொண்டிருக்கிறாள். வயதான பெற்றோர் உணவின்றி மூலையில் சுருண்டு படுத்துக்கிடக்கின்றனர்... எங்கு திரும்பினாலும் அழுகுரல்... அழிமானங்கள்... நூற்றாண்டு கண்டிராத பேரரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது காஸாவில்.

gaza war

ஹமாஸை அழிப்பதாகக் கூறி காஸாவை முழுமையாக நிர்மூலமாக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல். அதன் ராணுவம் காஸா நகரின் குடியிருப்புப் பகுதிகள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்திவருகிறது. நகரைத் தரைமட்டமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, அங்குள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகிறது. படுக்கைகள் மற்றும் உடைமைகளை மூட்டை கட்டிக்கொண்டு, எதிர்காலம் குறித்த எந்த நம்பிக்கையுமின்றி மக்கள் நிராதரவாகப் புலம்பெயர்கின்றனர். தன் சகோதரியைப் பாதுகாக்க அவளை முதுகில் தூக்கிச் செல்கிறான் ஒரு சிறுவன். எப்போது யார் உயிர் போகும் என்ற நிச்சயமின்மையில் குடும்பத்தினர் கைகளை இறுக பற்றியபடி, தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்த நிலத்தைவிட்டு வெளியேறுகின்றனர்.

”நாங்கள் எங்கே போவோம். எங்கு போனாலும் எங்கள் மீது குண்டு வீசப்படுகிறது. புதைகுழியைத் தவிர, எங்களுக்கு இனி இங்கு இடமே இல்லை” என்கின்றனர் அம்மக்கள். இரண்டு ஆண்டுகளாக காஸாவில் இனப்படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது இஸ்ரேல். அதன் தாக்குதலில் இதுவரையில் 65,000 மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒவ்வொரு எண்ணிக்கையும் ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரு கனவு.

காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் இனப்படுகொலையை நிறுத்த ஐநாடுகளின் சபை கூடியுள்ளது. பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக மிகத் தாமதமாக அறிவித்துள்ளன. பேரழிவை நிறுத்துங்கள் என்று பல நாடுகள் இஸ்ரேலிடம் கோருகின்றன. ஆனால், இஸ்ரேலின் மனசாட்சியை எந்த அழுகுரலும் உலுக்கவில்லை.