ஈரான் மீது இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலுக்கு அமெரிக்கா இணைந்துள்ளது. டெஹ்ரானில் பல இடங்களில் தாக்குதல் நடந்து, அலி கமேனி சுரங்கத்தில் பதுங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானின் அணுசக்தித் திட்டம் உலகிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, இஸ்ரேலுடன் இணைந்து தாக்குதல் அவசியம் என அறிவித்துள்ளார்.
ஈரான் மீது நேரடித் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 30 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் அங்கு உச்சகட்ட பதற்றம் நீடித்து வருகிறது.
பல இடங்களில் கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.. குறிப்பாக ஈரானின் உட்சபட்ச தலைவர் அலி கமேனியின் வீடு மற்றும் அலுவலகம், உளவுத்துறை தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. அங்கு பதற்றம் நீடித்து வருவதால் அலி கமேனி சுரங்கத்தில் பதுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது..
இப்படி பதற்றமான சூழலுக்கு மத்தியில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் தாக்குதலை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
ஈரானிய ஆட்சி முறையிலிருந்து எழும் "உடனடி அச்சுறுத்தல்களை" அகற்றுவதற்காக, ஈரானில் அமெரிக்க ராணுவம் தனது நேரடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அதிகாலை முதலே இஸ்ரேலிய விமானப்படையுடன் இணைந்து அமெரிக்கப் படைகள் ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.
இந்தத் தாக்குதல் குறித்துப் பேசிய டிரம்ப், "ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பயங்கரவாத ஆதரவு உலகிற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எமது தேசத்தையும் நட்பு நாடுகளையும் காக்க இந்த நடவடிக்கை அவசியமாகிறது, ஈரான் அணு ஆயுத வலிமை பெறுவதை அனுமதிக்க மாட்டோம்" எனத் தெரிவித்துள்ளார்.
டெஹ்ரானில் உள்ள அதிபர் மாளிகை, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலக வளாகம் மற்றும் ஈரானின் ஏவுகணைத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் அரங்கேறி வருகின்றன.. இதனால் ஈரான் தனது வான்பரப்பை முழுமையாக மூடியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானியப் புரட்சிகரப் படை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவிக்கு டெல அவிவில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..