இஸ்ரேல் போர் கோப்புப்படம்
உலகம்

“அமைதி திரும்பும்” - இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையேயான போர் நிறுத்தத்தை அடுத்து அரசு நம்பிக்கை!

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹெஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் லெபனானில் அமைதி திரும்பும் என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது..

ஜெ.நிவேதா

இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம்தேதி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு அடுத்த நாள் முதல் இஸ்ரேல் மீது ஹெஸ்புல்லாவும் தாக்குதலைத் தொடங்கியது. லெபனானின் தெற்கு எல்லைப்பகுதியில் இஸ்ரேல் படைகளுக்கும், ஹெஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே தீவிர சண்டை நடந்து வந்தது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்

இந்த நிலையில் இஸ்ரேல் - ஹெஸ்புல்லா இடையே போர் நிறுத்தம் நவம்பர் 26ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதேநாளில் கூட லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதில் 42 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஹெஸ்புல்லா போராளிகள் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் போர் நிறுத்த அறிவிப்பு வெளியானது.

அமெரிக்காவின் தலையீட்டின் பேரில் நடந்துள்ள இஸ்ரேல் - ஹெஸ்புல்லா போர் நிறுத்த ஒப்பந்தம் ஒரு நற்செய்தி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். காசாவுக்கு எதிரான போரை நிறுத்துவதற்கு இது புதிய அழுத்தத்தை தரும் என்றும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கான வழியாக அமையும் என்றும் பைடன் கூறினார்.

ஜோ பைடன்

அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இஸ்ரேல், ஹெஸ்புல்லா போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கையை இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளது. ஆயினும் உடன்படிக்கையை ஹெஸ்புல்லா மீறினால், தாக்குதல் நடத்தப்படும் என்றும் தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினால் திருப்பித்தாக்குவோம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

14 மாத கால போர், முடிவுக்கு வந்ததால், போர் நடந்த தெற்கு லெபனான் பகுதியில் இருந்து முன்னர் வெளியேறியவர்கள், மீண்டும் தங்கள் ஊர்களுக்குத் திரும்பி வருகிறார்கள். தெற்கு லெபனானை நோக்கி நூற்றுக்கணக்கான கார்கள் பயணப்படுவதை பார்க்க முடிகிறது.

லெபனான்

போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். போர்நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ள லெபனான் பிரதமர் Najib Mikati, இதன் மூலம் நாட்டில் அமைதியும் நிலைத்தன்மையும் உருவாகும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதை அமெரிக்கா தலைமையிலான சர்வதேச குழு கண்காணிக்க உள்ளது.