ஹமாஸை அழிப்பதாகக் கூறி காஸாவில் குழுமியிருக்கும் பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் ராணுவம், விமானக் குண்டுவீச்சுகள் மூலமும் தரைவழிப் பீரங்கிகள் மூலமும் அழித்து வருகிறது.
போர் என்றால் ஒருகாலத்தில் ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் கேட்டும் பார்த்தும் வியந்த செய்திகள் போக, இன்று தினம்தினம் போர் பற்றிய செய்திகளைக் கேட்கும் அளவுக்கு வைத்திருக்கிறது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸை அழிப்பதாகக் கூறி காஸாவில் குழுமியிருக்கும் பாலஸ்தீனியர்களை விமானக் குண்டுவீச்சுகள் மற்றும் தரைவழிப் பீரங்கிகள் மூலம் அழித்து வருகிறது.
இஸ்ரேல் ராணுவத்தின் காட்டுமிராண்டிக் கண்களுக்கு குழந்தைகள், பெண்கள் என யாரும் தெரிவதில்லை. காஸாவை முழுமையாக நிர்மூலமாக்குவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. ஆம், அதற்காக காஸாவில் உள்ள மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கையிலும் இஸ்ரேல் ராணுவம் இறங்கியுள்ளது.
இன்றுவரை தொடரும் போரில், பெரிய கட்டடங்கள் மட்டுமின்றி, சிறிய கூடாரங்களைக்கூட விட்டுவைக்காமல் இஸ்ரேல் படைகள் மூர்க்கமாக தாக்கி வருகின்றன. இதிலிருந்து தப்ப வடக்கு, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றனர். தெற்கில் இஸ்ரேல் ராணுவத்தின் மனிதாபிமான பகுதிகளுக்கு பலரும் இடம்பெயர்ந்து வருகின்றனர். போரினால், இதுவரை அங்கு 65,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளதாக நம்பப்படுகிறது. ஆனாலும் போர் ஓய்ந்தபாடில்லை; அழுகுரல்களும் ஓய்ந்தபாடில்லை. மேலும், காயங்களுடன் உயிர்பிழைக்கும் நபர்களையும் குழந்தைகளையும் காப்பாற்ற வைப்பதற்கு மருந்துகளும் இல்லை; மருத்துவமனைகளும் இல்லை. அனைத்தையும் சுக்குநூறாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். எங்குப் பார்த்தாலும் கட்டடச் சுவர்களே உடைந்து நிரம்பிக் கிடக்கின்றன.
இதற்கிடையே காஸாவில் உடனடியாக போரை நிறுத்தவும், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன. மேலும், ஐக்கிய நாடுகள் சபையில் உலகத் தலைவர்கள் போர்நிறுத்தம் செய்ய அழைப்புவிடுத்தபோதிலும், இஸ்ரேல் இடைவிடாத தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஆடும் இந்தக் கதகளியில் காஸாவில் தங்கியிருக்கும் பாலஸ்தீன மக்களே நாள்தோறும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இஸ்ரேலிய தாக்குதலில் இருந்து தப்பி ஓடும் பாலஸ்தீனியர்களுக்கான தற்காலிக புகலிடங்கள்கூட, தற்போது கொலைக் களமாக மாறியிருக்கிறது என்பதுதான் வேதனையின் உச்சம். அல்-அஹ்லி மைதானத்தில் 7 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதேநாளில் நேற்று ஒருநாள் காஸா முழுவதும் 85 பேர் இரையாகி உள்ளனர். இதற்கிடையே 7 நாட்டுப் போர்களை நிறுத்தியதாக மார்தட்டிக் கொள்ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ’தமக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்’ என்கிறார். ஆனால் பிரான்ஸ் அதிபர் மேக்ரானோ, ’காஸா போரை நிறுத்திவிட்டு நோபலைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொல்லும் அதேவேளையில், அமெரிக்கா, இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதை மேக்ரோன் ஒப்புக்கொள்ளவும் தவறவில்லை. காரணம், அமெரிக்காவின் ஆதரவால்தான் இஸ்ரேலே இப்படி ஆடி வருகிறது. என்றாலும், மனிதர்களே மனித வலியை உணராதபோது, அதற்கு வேறு எந்த வகையிலும் தீர்வு காண முடியாது. ஆகையால், வரும் நாட்களிலாவது இதற்குத் தீர்வு கிடைக்குமா என நம்புவோம்.