நியூசிலாந்து சந்தித்த கருப்பு தினங்களில் இதுவும் ஒன்று. வரலாறு காணாத வன்முறை தாக்குதலை நியூசிலாந்து சந்தித்துள்ளது. நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக தாக்குதலுக்கு காரணமல்ல.
கிறைஸ்ட் சர்ச் நகரிலுள்ள ஹாக்லே பூங்கா அருகே மஸ்ஜித் அல் நூர் என்ற புகழ்பெற்ற மசூதியுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 300 க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்களும் தொழுகையில் பங்கேற்பதற்காக சென்றுள்ளனர். வங்கதேச அணியினர் சென்ற பேருந்தில் இருந்து இறங்கி மசூதிக்கு செல்வதற்கு முன்பாக, இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதையடுத்து, வீரர்கள் வந்த பேருந்திலேயே பத்திரமாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதலில் 49க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியதை அந்த நபர்கள் பேஸ்புக்கில் நேரலை செய்ததாக கூறப்படுகிறது.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். துப்பாக்கிச்சூட்டால் அப்பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபகுதியில் உள்ள மற்றொரு மசூதியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதால் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், தொழுகை நடத்திக் கொண்டிருந்த பலர் அலறியடித்துக் கொண்டு ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பெண் உட்பட நான்கு பேரை நியூசிலாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே, பாதுகாப்பு காரணங்களால் நியூசிலாந்து, வங்கதேச அணிகளிடையே நாளை தொடங்க இருந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. வங்கதேச கிரிக்கெட் அணியின் சுற்றுப்பயணமும் கைவிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் கிரிக்கெட் விளையாடுவது பொருத்தமற்றது, வீரர்கள் விளையாடக்கூடிய மனநிலையில் இல்லை என நியூசிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் டேவிட் வைட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வங்கதேச அணி வீரர் முஷ்ஃபிகுர் ரஹ்மான், துப்பாக்கிச்சூட்டில் இருந்து கடவுள் காப்பாற்றியுள்ளார் என்றும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன், நியூசிலாந்தில் முதன்முறையாக நடைபெற்றுள்ள இந்த துப்பாக்கிச்சூடு எதிர்பாராத வன்முறை சம்பவம் எனத் தெரிவித்துள்ளார். இன்றைய நாள் நியூசிலாந்து வரலாற்றில் மோசமான நாள் எனக்கூறியுள்ள அவர், இதுபோன்று ஒரு தாக்குதல் இதுவரை நடந்ததில்லை என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், கிறைஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூடு சம்பத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இம்ரான் தனது ட்விட்டரில், “நியூசிலாந்தின் கிறைஸ்ட் சர்ச் பகுதியில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. நான் தொடர்ந்து சொல்லி வந்தது உறுதியாகியுள்ளது. பயங்கரவாதத்திற்கு மதமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்தனை செய்கிறேன்.
அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு எந்தவொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றாலும் இஸ்லாமையும், 1.3 பில்லியன் முஸ்லீம்களையும் குற்றம்சாட்டும் நிலை இருந்து வருகிறது. அத்தகைய நிலையில், இதுபோன்ற தாக்குதல்கள் இஸ்லாமியர்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. இஸ்லாமியர்களின் சட்டப்பூர்வமான அரசியல் போராட்டங்களை பலவீனப்படுத்தும் நோக்கில் திட்டமிட்டே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.