Ceuta issue in spain reuters
உலகம்

சியூட்டாவில் ஆயிரக்கணக்கானோர் ஊடுருவல்.. ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் காரணமா? விவரம்!

ஆப்பிரிக்காவின் வடக்கு கடற்கரையில் ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியான 'சியூட்டா' (Ceuta) நகருக்குள், மொராக்கோவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோ குவியத் தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் என்ன?.. விரிவாக பார்க்கலாம்...

PT WEB

புவியியல்ரீதியாக ஆப்பிரிக்காவிலும், அரசியல்ரீதியாக ஐரோப்பாவிலும் உள்ள சியூட்டா நகரம், மொராக்கோ குடியேற்ற முயற்சியால் இரு கண்டங்களுக்கிடையிலான நெருக்கடியின் மையமாக மாறியுள்ளது. 83 ஆயிரம் மக்கள் வாழும் இந்த நகரில் சமீப நாட்களில் பெருமளவில் ஊடுருவல் அதிகரித்ததால், நிலைமை கட்டுக்குள் வர ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் ராணுவத்தை களமிறக்கி உள்ளார்.

ஆப்பிரிக்காவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் பகுதியில் அமைந்துள்ள 'சியூட்டா' (Ceuta) நகரின் மொத்த மக்கள்தொகையே 83 ஆயிரம் பேர்தான். ஆனால் கடந்த சில நாட்களாக மொராக்கோவிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் கடலில் நீந்தியபடியும், வேலிகளைத் தாண்டியபடியும் சியூட்டாவுக்குள் ஊடுருவுகின்றனர். இதனால் கடலில் மூழ்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகமும் நிகழ்ந்துள்ளது.

Ceuta issue in spain

சியூட்டாவுக்குள் நுழைய முயன்று கடலில் இடைமறிக்கப்படுவோரை, உடனே திருப்பி அனுப்ப முடியாது என ஸ்பெயின் நாட்டு உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதே, மொராக்கோ நாட்டினரின் ஊடுருவலுக்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நிலைமை கைமீறியதை அடுத்து, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) ராணுவத்தை களமிறக்கியுள்ளார்.

மத்திய தரைக் கடலையும் அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கும் ஜிப்ரால்டர் (Gibraltar) நீரிணையின் வட ஆப்பிரிக்க கரைப் பகுதியில் சியூட்டா நகரம் அமைந்துள்ளது. ஆனால் 15ஆம் நூற்றாண்டிலிருந்து இது ஐரோப்பிய அரசுகளின் அங்கமாகவே இருந்துவந்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் ஸ்பெயினின் வசம் சென்றது. இப்போது ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்குள் தன்னாட்சிக்குட்பட்ட பிரதேசமாக இயங்கிவருகிறது. புவியியல்ரீதியாக ஆப்பிரிக்காவில் இருந்தாலும், புவி அரசியல்ரீதியாக சியூட்டா நகரம் ஐரோப்பாவின் நுழைவாயிலாகவே கருதப்படுகிறது. எனவே, மொராக்கோ நாட்டினரின் ஊடுருவல் இரு கண்டங்களுக்கிடையிலான பிரச்சினையாக மாறியுள்ளது.