டொனால்ட் டிரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் குறித்து வெள்ளை மாளிகையின் முன்னாள் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் அதிர்ச்சி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். வெள்ளை மாளிகையில் இருக்க மெலானியாவுக்கு பிடிக்கவில்லை, அது பழையதும் சிதைந்ததுமாக உள்ளது என்று அவர் விமர்சித்ததாக கூறியுள்ளார். மேலும், கணவருடன் தேர்தல் பிரச்சாரங்களில் கலந்துகொள்வதற்கே மெலானியா பணம் வாங்கியதாகவும் சாரா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
செய்தியாளர் - கார்த்திகேயன்
டிரம்பின் மனைவி குறித்து எந்த செய்திகள் வெளியானாலும் அதனை கேட்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. ஆனால், அவர் குறித்து தற்போது வெளியாகியிருக்கும் புதிய செய்தி, பலரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
அவர் மீது டிரம்ப் உடன் நெருங்கி பணியாற்றிய ஒருவரே கூறியிருப்பது தான் பரபரப்பின் உச்சம். அதாவது, பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில், ஜாக் கோச்சியரெல்லா என்ற நெறியாளர் Podcast நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், வெள்ளை மாளிகையின் முன்னாள் துணை பத்திரிகை செயலாளர் சாரா மேத்யூஸ் என்பவர், சிறப்பு விருந்தினராக சமீபத்தில் கலந்துக் கொண்டார்.
அப்போது பேசிய அவர், நான் ஒரு வருடத்திற்கு தேர்தல் பிரச்சார பணிகளிலும், வெள்ளை மாளிகையிலும் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால், மெலானியா டிரம்பை நான் வெள்ளை மாளிகையில் சந்தித்ததே இல்லை என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மெலானியா டிரம்புக்கு வெள்ளை மாளிகையில் இருக்க பிடிக்கவில்லை என்றும், இது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்று கூறினார்.
வெள்ளை மாளிகை ஒரு பழைமையான, சிதைந்து கிடக்கும் இடமென்று மெலானியா டிரம்ப் விமர்சித்ததாகவும், வெள்ளை மாளிகையில் வசிப்பதை விட நியூயார்க்கில் நேரம் செலவிடவே அவர் விரும்பியதாகவும், சாரா குற்றஞ்சாட்டினர்.
இதுவரை வெறும் சாதாரண குற்றச்சாட்டுக்களை மட்டுமே முன்வைத்து வந்த சாரா மேத்யூஸ், அடுத்து வைத்த குற்றச்சாட்டு தான் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அதாவது, தனது கணவருடன் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மெலனியா பணம் பெற்றுக்கொண்டார் என்றும் பகீர் குற்றச்சாட்ட முன்வைத்துள்ளார். ஏற்கனவே டிரம்புக்கும், அவரது மனைவிக்கும் இடையே சுமூகமான உறவு இல்லை என்று கூறி வரும் நிலையில், இவரது இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.