உலகம்

ஐஎஸ் தலைவர் பாக்தாதி மரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை

webteam

ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி மரணத்தை உறுதிபடுத்த முடியவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

ஐ.எஸ் அமைப்பிற்கு எதிரான போருக்கு தலைமை தாங்கும் லெப்டினன்ட் ஜெனரல் ஸ்டீபன் டவுன்சென்ட் இதுதொடர்பாக விர்ஜினியாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாக்தாதி உயிரிழப்பு தொடர்பாக ஆதாரம் எதுவும் இல்லை எனத் தெரிவித்தார். பாக்தாதியை பிடித்து தருபவர்களுக்கு 161 கோடி ரூபாயை பரிசாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக, சிரியாவில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை கண்காணித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.எஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை. ஏனெனில், பாக்தாதி மரணமடைந்ததாக ஏற்கனவே செய்திகள் பரவி வந்தன. கடந்த மாதம் வான்வழித் தாக்குதலில் பாக்தாதி உயிரிழந்ததாக ரஷ்யாவும் தெரிவித்திருந்தது. இதனிடையே, பாக்தாதி உயிரிழப்பை உறுதி செய்தோ, மறுப்பு தெரிவித்தோ ஐ.எஸ் அமைப்பின் ஊடககங்களில் இதுவரை செய்தி வெளியாகவில்லை. ஈராக்கில் மொசூல் நகரம் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மறுநாள் பாக்தாதி உயிரிழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இது உண்மையாக இருப்பின், ஐ.எஸ் அமைப்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.