உலகம்

கல்முனை தற்கொலை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

webteam

இலங்கை கல்முனையில் நடந்த தற்கொலை தாக்குதல் சம்பவத்துக்கும் ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் திருவிழாவின்போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் உள் ளிட்டவற்றைக் குறிவைத்து நடத்தப்பட்ட அடுத்தடுத்த வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இலங்கையில் மேலும் பல இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு கல்முனை அருகே ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் அதிரடி படையினருக்கும் சண்டை ஏற்பட்டது. மோதலின் போது பாதுகாப்பு படையினரிடம் சிக்காமலிருக்க, வீட்டிலிருந்த 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள், குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதில், 3 பெண்கள், 6 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரி ழந்தனர். 

இந்நிலையில் கல்முனைத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ள ஐஎஸ் அமைப்பு, 3 பேர் தற்கொலை படைகளாகச் செயல்பட்டனர் என்று தெரிவித்துள்ளது. அவர்களில் இரண்டு பேரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, அபு அகமது, அபு சுபியான், அபு அல் க்வாகா ஆகிய தங்கள் போராளிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் பாத்திமா லதீபா என்ற பெண், மாவனெல்ல-மாரவில பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பாதுகாப்புப் படை யினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேடப்படும் நபர்களாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் இவரும் இடம் பெற்றிருந்தார்.