ஈரான் அதிபர் பெசஷ்கியான் Pt web
உலகம்

”காமேனி படுகொலை; அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி தராமல் ஓயமாட்டோம்” - ஈரான் அதிபர் பெசஷ்கியான் உறுதி.!

ஈரான் உச்சத் தலைவர் காமேனி கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்திருக்கும் நிலையில், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதில் தராமல் ஓயமாட்டோம் என ஈரான் அதிபர் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார்.

Premkumar S

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், நேற்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து ஈரானின் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகள் மீது நேற்று தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, ஈரானின் உட்சபட்ச தலைவர் காமேனியின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்துள்ள நிலையில், இந்த இரண்டு தரப்புக்கும் இடையே மீண்டும் போர் உருவாகவுள்ள சூழ்நிலை ஏற்பட்டது.

அயதுல்லா அலி காமேனி

இந்த நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் காமேனி இத்தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டதாக அதிபர் டிரம்ப் இன்று காலை அறிவித்திருந்தார். ஆனால், ஈரான் வெளியுறவுத் துறை அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது. ஆனால், ஈரான் ஊடகங்கள் காமேனி அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துக்கின்றன. மேலும், காமேனியின் மகன் மற்றும் மருமகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் உயிரிழந்திருப்பதாக செய்திகளை வெளியிட்டு இருக்கின்றன.

இந்த சூழலில் தான், ஈரான் அதிபர் பெஷேஷ்கியன் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதில் தராமல் ஓயமாட்டோம் என தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”காமேனி படுகொலை ஒரு பெரிய குற்றம். இதற்கு பொறுப்பானவர்கள் உரிய விளைவுகளை சந்திப்பார்கள். இது இஸ்லாமிய உலகம் மற்றும் ஷியா மத வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தைத் திருப்பும். இந்த மாபெரும் குற்றத்திற்கு ஒருபோதும் பதிலளிக்கப்படாமல் போகாது, தலைவரின் தூய இரத்தம் ஒரு கர்ஜிக்கும் நீரூற்று போல பாயும்” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.