ஹிஜாப் ஒழுங்குமுறை விதிகளை மீறியதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், ஆடைக்கட்டுப்பாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 22 வயதான மஹ்சா அமினி, காவல் துறை விசாரணையின் போது சந்தேகத்திற்குரிய முறையில் உயிரிழந்தார். இந்த மரணம் ஈரானிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பெண்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு 'பெண், வாழ்க்கை, சுதந்திரம்' என்ற முழக்கத்துடன் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டங்களை ஈரான் அரசு கடுமையான அடக்குமுறைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மூலம் ஒடுக்க முயன்றபோதிலும், 4 ஆண்டுகளுக்குப் பிறகும் அதன் தாக்கம் சமூகத்தில் ஆழமாக நிலைத்து நின்றுள்ளது. ஈரானில் முக்கிய நகரங்களில் பெண்கள் பலரும் ஹிஜாப் அணியாமல் பொது இடங்களுக்கு வரத் தொடங்கியுள்ளனர். ஈரானில் ஹிஜாப் விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் சட்ட மசோதா கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் நிறைவேற்றப்பட்டது. எனினும், பெரும்பாலான மக்கள் எதிர்ப்பதால், இச்சட்டத்தை உடனடியாக அமல்படுத்த முடியாது என அதிபர் மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளிடமிருந்து ஈரான் கடுமையான சர்வதேச அழுத்தங்களைச் சந்தித்து வரும் சூழலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.