Pickaxe Mountain web
உலகம்

சாட்டிலைட் படங்களில் மட்டுமே சிக்கும் ஈரானின் Pickaxe Mountain.. ஏன் இவ்வளவு ரகசியம்?

அறிவியல் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு நிறுவனத்தின் (ISIS) கூற்றுப்படி, இந்த வளாகம் 'குஹ்-இ கொலாங் காஸ் லா' (Kuh-e Kolang Gaz La) எனப்படும் ஒரு பெரிய மலைக்குக் கீழே குறைந்தது 100 மீட்டர் (328 அடி) ஆழத்தில் இருக்கிறது.

PT WEB

செய்தியாளர் ; M. மீரா

ஈரானின் பிக்காக்ஸ் (Pickaxe Mountain) மலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இங்கு ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் ஒரு பகுதியையும், மேம்பட்ட செறிவூட்டும் Centrifuges சேமித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது, சந்தேகிக்கிறது. இதனால் இந்த நிலத்தடி அணுசக்தி தளத்தின் மீது டிரம்ப் கவனத்தைத் திருப்பியுள்ளார். நாங்கள் மிக விரைவில் அந்தப் பகுதியைத் தாக்குவோம். அதைத் தடுக்க அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

Pickaxe Mountain

இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான எந்தவொரு அமெரிக்கத் தாக்குதலும், வளைகுடா முழுவதிலும் போரை விரிவுபடுத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.

பிக்காக்ஸ் மலை எங்கு இருக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன ?

பிக்காக்ஸ் மலை ஈரான் நாட்டின் மையத்தில், பூமிக்கு அடியில் ஆழமாக அமைந்துள்ள பலத்த பாதுகாப்புடன் கூடிய ஒரு வளாகமாகும். அறிவியல் மற்றும் சர்வதேசப் பாதுகாப்பு நிறுவனத்தின் (ISIS) கூற்றுப்படி, இந்த வளாகம் 'குஹ்-இ கொலாங் காஸ் லா' (Kuh-e Kolang Gaz La) எனப்படும் ஒரு பெரிய மலைக்குக் கீழே குறைந்தது 100 மீட்டர் (328 அடி) ஆழத்தில் இருக்கிறது.

Pickaxe mountain

இந்த வளாகத்தின் கட்டுமானப் பணிகள் 2020-இல் தொடங்கின; அப்போது, ​​அணு எரிபொருளைத் தயாரிக்கும் சென்ட்ரிஃபியூஜ்களை (centrifuges) ஒருங்கிணைக்கும் மையமாக ஈரான் ஐ.நா.வின் சர்வதேச அணுசக்தி முகமையிடம் அறிவித்திருந்தது.

இந்த வளாகத்தின் வரைபடங்கள் எதுவும் பொதுவெளியில் கிடைக்கப்பெறவில்லை, நிபுணர்கள் பெரும்பாலும் சாட்டிலைட் படங்களை ஆய்வு செய்வதன் மூலமே இதுகுறித்த தகவல்களைத் திரட்டுகின்றனர். சாத்தியமான வான்வழித் தாக்குதல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கான்கிரீட் கொண்டு வலுப்படுத்தப்பட்ட நுழைவாயில்கள், பரந்த பாதுகாப்பு எல்லை மற்றும் பல சுரங்கப்பாதை அமைப்புகள் ஆகியவற்றை இந்த வளாகம் கொண்டுள்ளது என்று ஐஎஸ்ஐஎஸ் (ISIS - Institute for Science and International Security) தனது சமீபத்திய அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

pickaxe mountain

பிக்காக்ஸ்' தளத்தில் காணப்படும் இந்த அதிகரித்த செயல்பாடுகளுக்குப் பல சாத்தியமான காரணங்கள் இருக்கலாம் என்று சர்வதேச ஆய்வுகளுக்கான மையம்' (Center for Strategic & International Studies) தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையிடம் உறுதியளித்தபடி ஈரான் centrifuges உருவாக்கிக்கொண்டிருக்கலாம்; அல்லது அழிக்கப்பட்ட பிற நிலையங்களின் செயல்பாடுகளை இங்கு மாற்றித் தனது திட்டத்தை விரிவுபடுத்திக்கொண்டிருக்கலாம் அல்லது அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருளான யுரேனியத்தைச் செறிவூட்டுவதற்கான ஒரு ரகசிய நிலையத்தை உருவாக்கிக்கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அங்கு செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளதா?

கடந்த ஜூன் மாதத் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பின் ஒரு பகுதியையும், மேம்பட்ட செறிவூட்டல் centrifuges இயந்திரங்களையும் பிக்காக்ஸ் மலைக்கு நகர்த்தியதாக இஸ்ரேலிய உளவுத்துறை நம்புவதாக, இவ்விவகாரத்தை நன்கு அறிந்த ஒரு இஸ்ரேலிய வட்டாரம் சிஎன்என்-க்குத் தெரிவித்துள்ளது.

குண்டு வீசத் தயாராகும் தரத்திலான தனது யுரேனியம் இருப்பை மூடிமறைக்கும் முயற்சிகளை ஈரான் கடுமையாக முடுக்கிவிட்டதாகவும், வேண்டுமென்றே சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாகவும், நுழைவாயில்களில் வெடிகுண்டுகளைப் பொருத்தி கண்ணிவெடிகளை வைத்ததாகவும் சிஎன்என் முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

Pickaxe Mountain

ஜூலை மாத தொடக்கத்தில், ஈரானில் உள்ள ஒரு மூத்த பாதுகாப்பு அதிகாரி சிஎன்என்-னிடம், பிக்காக்ஸ் மலையில் அணுசக்தி நடவடிக்கைகள் நடைபெறுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று தெரிவித்தார். ஈரான் தனது அணுசக்தித் திட்டம் முற்றிலும் அமைதியான எரிசக்தி நோக்கங்களுக்காக மட்டுமே என்று கூறினார்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் இதைத் தாக்கக்கூடுமா என்பது குறித்து ஆய்வாளர்களிடையே கலவையான கருத்துகள் நிலவுகின்றன. இதனைத் தாக்க தரைவழி நடவடிக்கை சிக்கலானதாக இருந்தாலும், தாக்குதலுக்கான பல சாத்தியமான வழிகளை ஐஎஸ்ஐஎஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

அந்த இரகசியமான தளத்திற்கு காற்றோட்டம், வெப்பமூட்டல், குளிரூட்டல், விநியோகங்கள், மின்சாரம் மற்றும் பணியாளர்கள் தேவைப்படும் – இவை அனைத்தும் அமெரிக்காவும் இஸ்ரேலும் பயன்படுத்திக்கொள்ளக்கூடிய பலவீனங்களாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், அந்தத் தளத்தின் மையப் பகுதி ஆழமாக இருக்க வாய்ப்புள்ளதால், தாக்குதல்கள் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது