ஈரானிய இராணுவத்தின் முக்கிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் துணைப் பிரிவுகள் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கி வருகின்றன. அப்படியெனில், பல தசாப்தங்களாக தெஹ்ரான் கட்டியெழுப்பிய ஆயுதக் கிடங்கினால் மட்டுமே இது சாத்தியமாக முடியும். மத்திய கிழக்கில் இலக்குகளைத் தாக்கும் விதத்தைப் பார்க்கும்போது ஈரானின் கை ஓங்கி்யிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலில் கூட்டுத் தாக்குதலால் ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிபுரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில்தான், ஈரான் தனது பதிலடி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆபரேஷன் ஃபதே-இ-ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தவரும் நிலையில், வளைகுடா நாடுகளில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே, கடந்த இரண்டு நாட்களாக ஈரானின் மகத்தான ஆயுத பலம் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மத்திய கிழக்கில் இலக்குகளைத் தாக்கும் விதத்தைப் பார்க்கும்போது ஈரானின் கை ஓங்கி்யிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரானிய வெடிமருந்துகள் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க சொத்துகளை மட்டுமல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், பஹ்ரைன், சவுதி அரேபியா உள்ளிட்ட குறைந்தது 11 நாடுகளின் இலக்குகளையும் தாக்கின. ஈரானிய இராணுவத்தின் முக்கிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அழிக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் துணைப் பிரிவுகள் தொடர்ந்து இலக்குகளைத் தாக்கி வருகின்றன. அப்படியெனில், பல தசாப்தங்களாக தெஹ்ரான் கட்டியெழுப்பிய ஆயுதக் கிடங்கினால் மட்டுமே இது சாத்தியமாக முடியும்.
அந்த வகையில், சீனா ஈரானுக்கு உதவியதா எனக் கேள்விகள் எழுகின்றன. காரணம், ஈரானின் இறையாண்மையைக் காக்கும் வகையில் அந்த நாட்டுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. ஆனால் அத்தகைய ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதில் சீனாவின் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. ஈரானின் தற்போதைய ஆயுதக் களஞ்சியத்தில் பெரும்பாலானவை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என்றாலும், அவற்றில் பல பழைய சீன வடிவமைப்புகளின் வழித்தோன்றல்களாக உள்ளன. இப்படித்தான் சீனா, ஈரானின் ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரத்தில், அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்னதாகவே சீனா, ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கியதாக மிடில் ஈஸ்ட் ஐ செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானுக்கு சீனா எவ்வாறு ஆயுதங்களை வழங்கியது என்பது குறித்து அது விரிவாகக் கூறியுள்ளது. போர் தொடங்குவதற்கு முன்பு HQ-16 மற்றும் HQ-17AE போன்ற கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ட்ரோன்களைத் தாக்க கப்பல்களையும் சீனா அனுப்பியதாக அது செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தச் செய்தியை சீன அதிகாரிகள் மறுத்துள்ளனர். காரணம், ஈரான் போன்ற தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்க சீனா விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா வரலாற்று ரீதியாகத் தவிர்த்து வருவதாக ப்ளும்பெர்க் அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும், சீனா ஈரானுக்கு உதவி செய்ததா என்பது தாக்குதல் நிறைவுற்ற பின்பே தெரிய வரும்.