iron dome failed iran attack
உலகம்

பற்றியெரியும் இஸ்ரேல் நகரங்கள்.. வீழ்த்தப்பட்ட Iron Dome.. ஈரானின் புதிய தாக்குதல் முறை என்ன?

ஈரானின் புதிய தாக்குதல் முறைகள் இஸ்ரேலிய பாதுகாப்பு அரணான ஐயன் டோமை கிழித்தெறிந்து இஸ்ரேலில் ஏராளமான சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Praveen Joshva L

நீண்டகாலமாகவே இஸ்ரேல் தனது அண்டை நாடுகளுடன் மோதல் போக்கையை தொடர்ந்து வந்தது. அதோடு பல்வேறு தீவிரவாத அமைப்புகளும் அந்நாட்டை நோக்கி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. இதன் காரணமாக இஸ்ரேல் தனது நாட்டைப் பாதுகாக்க ஐயன் டோம் என்ற தற்காப்பு அமைப்பை ஏற்படுத்தியது. இந்த ஐயன் டோம் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் ஏவுகணை தாக்குதலில் இருந்து இஸ்ரேலை நீண்டகாலமாக காப்பாற்றி வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஈரானுடன் ஏற்பட்ட போரின்போது அந்நாட்டு ஏவுகணைகள் ஐயன் டோம் உள்ளிட்ட இஸ்ரேலின் தற்காப்பு ஏவுகணை அரணை வீழ்த்தி இஸ்ரேலில் நுழைந்து குறிப்பிடத்தக்க அளவு சேதத்தை ஏற்படுத்தியது.

இஸ்ரேல் - ஈரான்

இந்தச் சூழலில் நடப்பாண்டு மீண்டும் இந்த இரு நாடுகளுக்கு இடையே போர் வெடித்துள்ள நிலையில், இஸ்ரேல் ஈரானை கடுமையாக தாக்கி வருகிறது. ஈரானிடம் இஸ்ரேலிய போர் விமானங்களோடு மோத போதிய திறன் இல்லாத சூழலில், தனது ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி அனுப்பி வருகிறது. அதிலும் ஈரான் தற்போது பயன்படுத்தி வரும் கிளஸ்டர் வெடிகுண்டு (Cluster Warheads) தொழில்நுட்பம் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சவாலாக மாறியுள்ள நிலையில், அதனை இஸ்ரேலின் ஐயன் டோமால்கூட வீழ்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாதாரண ஏவுகணைகள் ஒரு குறிப்பிட்ட இலக்கை மட்டும் தாக்கும். ஆனால் இந்த கிளஸ்டர் வெடிகுண்டு பொருத்தப்பட்ட ஏவுகணைகள் ஒரே ஒரு பெரிய வெடிகுண்டுக்கு பதிலாக, அதற்குள் நூற்றுக்கணக்கான சிறிய வெடிகுண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

இதன் காரணமாக இந்த ஏவுகணையை ஐயன் டோம் அமைப்பு தடுத்தாலும் அதிலிருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் இஸ்ரேலிய பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இஸ்ரேலிய நகரங்களான டெல் அவிவ், அஸ்கலோன் போன்ற நகரங்கள் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. சர்வதேச சட்டங்களின்படி, கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரான் இந்த ஆயுதத்தையே இஸ்ரேலை தாக்க அதிகளவில் பயன்படுத்தி வருகிறது.