Khorramshahr missile reuters
உலகம்

ஈரானின் 4000 கி.மீ ஏவுகணைகள்.. செய்வதறியாது திகைத்து நிற்கும் அமெரிக்கா!!

ஈரானின் 4000 கி.மீ. ஏவுகணை திறன்: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்கு புதிய அச்சுறுத்தல்

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஈரானிடம் ஏற்கனவே 4,000 கி.மீ. தொலைவு வரை தாக்குதல் நடத்தக்கூடிய ஏவுகணைத் திறன் இருக்கலாம் என்று வெளியாகியிருக்கும் தகவல் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளைத் தாண்டி, ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையான IRGC, தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பு தொடர்பான 2,000 கி.மீ. என்று தாங்களே விதித்திருந்த வரம்பை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரானின் ஏவுகணைத் திட்டத்தில் புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

Khorramshahr)

இந்நிலையில், ஈரானின் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றான கொர்ராம்ஷஹர் (Khorramshahr) ஏவுகணைதான் தற்போது முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

கொர்ராம்ஷஹர் (Khorramshahr) என்பது ஈரான் நாடே உள்நாட்டிலேயே தயாரித்த ஒரு நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை (Medium-range Ballistic Missile) ஆகும். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் மிக சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்றாகக் கருதப்படும் இதன் மிக சமீபத்திய மற்றும் மேம்பட்ட வடிவம் கொர்ராம்ஷஹர்-4 (கைபர்) ஆகும்.

கொர்ராம்ஷஹர் ஏவுகணை அதிகாரப்பூர்வமாக 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது. இதன் வெடிபொருளின் எடையைக் குறைப்பதன் மூலம் இதன் தூரத்தை 3,000 முதல் 4,000 கி.மீ வரை நீட்டிக்க முடியும் என அண்மைய பாதுகாப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Khorramshahr missile

இது சுமார் 1,500 முதல் 1,800 கிலோகிராம் எடையுள்ள கனரக வெடிபொருட்களைச் சுமந்து செல்லும். ஈரானிய ஏவுகணைகளிலேயே மிக அதிக எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது இதுவேயாகும்.

வான்வெளியில் இது ஒலியை விட பல மடங்கு வேகத்தில், அதாவது மேக் 8 முதல் 16 வரையிலான மிக அதிவேகத்தில் (Hypersonic speed) பயணிக்கக்கூடியது. (ஒலியின் வேகத்தை விட (Speed of Sound) ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் பயணிக்கும் வேகத்தை ஹைப்பர்சோனிக் வேகம் (Hypersonic Speed) என்று அழைக்கிறோம்.)

இதன் நவீன தொழில்நுட்பம் காரணமாக, இதனை வெறும் 12 நிமிடங்களில் ஏவுவதற்குத் தயார் செய்துவிட முடியும். இதன் மேம்பட்ட வழிகாட்டுதல் தொழில்நுட்பம் மற்றும் ரேடார்களை ஏமாற்றும் திறன் காரணமாக, எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் Khorramshahr-4 ஏவுகணையைத் தடுத்து அழிப்பது மிகவும் கடினமானதாகும்.

Khorramshahr missile

அதாவது, தற்போது மத்திய கிழக்கு பகுதிகளில் இருக்கும் அமெரிக்க ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டுள்ள ஈரானின் ஏவுகணைகள், எதிர்காலத்தில் ஐரோப்பாவின் சில தளங்களுக்கு சென்றடைய வாய்ப்புள்ளது. இது அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஆகும் . அங்கு அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களும் ஈரானின் தாக்குதல் வரம்பிற்குள் வரக்கூடும்.

1,500 கிலோ எடையுள்ள இதன் பிரம்மாண்ட வெடிசுமை மற்றும் அதிவேகம் காரணமாக, அமெரிக்க படைகளுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இது கடுமையான பாதுகாப்பு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.