ராமின் ரெசையன் x page
உலகம்

ஈரான் | பொதுவெளியில் பெண் ரசிகையைக் கட்டிப்பிடித்த கால்பந்து வீரர்!

ஈரானில் கால்பந்து ஒருவர், ரசிகையைப் பொதுவெளியில் கட்டிப் பிடித்ததற்காக விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

Prakash J

ஈரானின் மிகப்பழமையான கால்பந்து கிளப்களில் ஒன்று, தெஹ்ரானின் எஸ்டெக்லால் எஃப்சி. இதன் பிரபலமான வீரராக அறியப்படுபவர் ராமின் ரெசையன். 34 வயதான இவர், ஈரான் அணியை 60 தடவைகளுக்கு மேல் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இவர், கத்தார் மற்றும் பெல்ஜியம் கிளப் கால்பந்து அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.

இந்த நிலையில் இவர், சமீபத்தில் நடைபெற்ற போட்டி ஒன்றுக்குப் பிறகு பேருந்தில் ஏற முயல்வதற்கு முன்பு, ரசிகை ஒருவரை கட்டிப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வீடியோ ஆன்லைனில் பரவியுள்ளது.

இதையடுத்து அதைப் பார்த்தவர்கள் எல்லாம் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள், “பொது இடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் நாட்டின் கடுமையான சமூக விதிமுறைகளை மீறியுள்ளார்” எனக் குற்றம்சாட்டியுள்ளனர்.

ராமின் ரெசையன்

1979 இசுலாமியப் புரட்சிக்குப் பின்னர் இயற்றப்பட்ட ஈரானின் இஸ்லாமியச் சட்டத்தின்படி, ஆண்களும் பெண்களும் நெருங்கிய தொடர்புடையவர்கள் இல்லாவிட்டால், அவர்கள் உடல்ரீதியாகத் தொடர்புகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றின்போது பெண் ரசிகர் ஒருவரை எஸ்டெக்லாலின் கோல்கீப்பரான ஹொசைன் ஹொசைனி கட்டிப்பிடித்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

தவிர, அப்போது கால்பந்து கூட்டமைப்பு அவருக்கு டாலர் 4,700 அபராதம் விதித்தது. மேலும் 1979 இசுலாமியப் புரட்சிக்குப் பின்னர் அந்நாட்டுப் பெண்கள் கால்பந்து போட்டிகளில் கலந்துகொள்வது தடைசெய்யப்பட்டது. பின்னர், அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சாம்பியன்ஷிப் போட்டியில் அனுமதிக்கப்பட்டனர்.