செய்தியாளர் - M. மீரா
மத்திய கிழக்கில் ஏற்கனவே நீடித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த போர்த் தாங்கிகளில் ஒன்றாகக் கருதப்படும் M1A2S அப்ராம்ஸ் ( M1A2S Abrams ) டாங்கி மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. பல மில்லியன் டாலர் மதிப்புள்ள கனரக கவச வாகனத்தை, குறைந்த செலவில் இயக்கப்படும் ட்ரோன் தாக்கி தீப்பற்றச் செய்ததாக கூறப்படும் இந்த சம்பவம், நவீன போர்முறையின் மாறிவரும் தன்மையை மீண்டும் வெளிக் கொண்டு வந்துள்ளது.
ஏமனின் ஹவுதி அமைப்பின் அதிகாரப்பூர்வ பெயரான அன்சாருல்லா ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட காணொளியில், மாரிப் மாகாணத்தில் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான அமெரிக்க தயாரிப்பு M1A2S அப்ராம்ஸ் டாங்கி மீது ‘ராஜம்’ குவாட்காப்டர் (quadcopter) வெடிகுண்டு வீசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக்குப் பிறகு டாங்கியிலிருந்து புகை வெளியேறி, பின்னர் தீ வேகமாகப் பரவுவதாகவும் காணொளியில் தெரிகிறது.
சில நொடிகளில் ஏற்பட்ட பெரிய வெடிப்பு, டாங்கிக்குள் இருந்த வெடிமருந்துகள் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இதனால் கவச வாகனம் தீப்பந்தமாக மாறியதாக கூறப்படுகிறது. எனினும், இந்தத் தாக்குதல் மற்றும் சேதத்தின் உண்மையான அளவு குறித்தும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இந்தச் சம்பவம் ஒருகாலத்தில் போர்க்களத்தின் ராஜாவாகக் கருதப்பட்ட கனரக டாங்கிகளுக்கு, மலிவான ட்ரோன்கள் புதிய அச்சுறுத்தலாக மாறிவிட்டதா? என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது.
சமீபத்திய போர்களில் ட்ரோன்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக வணிகரீதியாக கிடைக்கும் குவாட்காப்டர்களை மாற்றியமைத்து, வெடிபொருட்களை ஏந்திச் சென்று கவச வாகனங்களின் பலவீனமான பகுதிகளை குறிவைத்து தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. டாங்கிகளின் மேல்பகுதியில் உள்ள கவசம், சில நேரங்களில் முன்புற மற்றும் பக்கவாட்டு பாதுகாப்பை விட குறைவாக இருக்கும் என்பதால், மேலிருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதன்படி இந்த வீடியோவில் வெளியான தாக்குதலும் நடந்துள்ளது