அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்காக ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான குழு பாகிஸ்தான் வந்தடைந்தது. ஆனால், அவர்கள் வந்த விதம் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் அரசுக்குச் சொந்தமான IRAN 04 மற்றும் IRAN 05 ஆகிய இரண்டு விமானங்களில் இந்தக் குழு பயணித்தது. அந்த விமானங்களின் முதல் வரிசை இருக்கைகளில் அதிகாரிகள் யாரும் அமரவில்லை. மாறாக, மினாப்பள்ளித் தாக்குதலில் பலியான 168 குழந்தைகளின் புகைப்படங்கள், ரத்தம் படிந்த பள்ளிப் பைகள், காலணிகள் மற்றும் வெள்ளைப் பூக்கள் வைக்கப்பட்டிருந்தன. இது குறித்துப் பதிவிட்ட சபாநாயகர் காலிபாப், "இவர்கள்தான் எனது தோழர்கள்" என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு 'மினாப் 168' என்றே பெயரிடப்பட்டுள்ளது. பிப். 28 ஆம் தேதி போர் தொடங்கிய முதல் நாளன்று, மினாப் பள்ளி மீது விழுந்த ஏவுகணைத் தாக்குதலில் 168 பிஞ்சுயிர்கள் பறிபோயின. இந்தத் துயரத்தை அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் நினைவூட்டவே ஈரான் இந்த வியூகத்தைக் கையாண்டுள்ளது.
ஈரானின் ஆயுதங்கள் துல்லியமற்றவை, இது அவர்கள் செய்த தாக்குதல்" என அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், 'தி நியூயார்க் டைம்ஸ்' வெளியிட்ட ஆதாரங்களின்படி, அங்குக் கண்டெடுக்கப்பட்டது அமெரிக்கா மட்டுமே பயன்படுத்தும் 'டொமாஹாக்' ஏவுகணை என்பது உறுதியானது. அமெரிக்க ராணுவத்தின் இலக்குத் தவறியதே இதற்குப் பின்னணி என அந்த அறிக்கை கூறுகிறது. இந்த முக்கியப் பேச்சுவார்த்தைக்காகப் பாகிஸ்தான் அரசு நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை நடைபெறும் செரீனா ஹோட்டலை சுற்றி 3 கிலோமீட்டர் தூரத்திற்கு 10,000 பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளனர். சபாநாயகருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் அபாஸ் அரக்சி உட்பட 30 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமெரிக்காவுடன் இன்று பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது.