உலகம்

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பரவ காரணமான விமான நிறுவனம்

webteam

மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஈரானை சேர்ந்த விமான நிறுவனமே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 10ஆம் இடத்தில் உள்ளது ஈரான். மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனா வைரஸால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது. ஈரானில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸ் பரவ ஈரானை சேர்ந்த விமான நிறுவனமே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானை சேர்ந்த தனியார் விமான சேவை நிறுவனம் மஹான் ஏர். உலகின் 66 நாடுகளுக்கு விமான சேவையை வழங்குகிறது. மற்ற நாடுகளில் வைரஸ் பரவ தொடங்கிய உடன் ஈரான் அரசு வெளிநாடுகளுக்கு விமானங்களை இயக்க தடை விதித்தது. ஆனால் அந்த தடையை மீறி மஹான் ஏர் நிறுவனம் தொடர்ந்து சீனாவுக்கு விமானங்களை இயக்கியது தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. ஜனவரி 31 முதல் ஏப்ரல் 20 வரை ஈரானில் இருந்து சீனாவிற்கு நேரடியாக பயணித்த விமானத்தை இயக்கிய ஒரே நிறுவனம், மஹான் விமான சேவை நிறுவனம் என தரவுகள் தெரிவிக்கின்றன.

ஈரானில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையிலும் தடையை மீறி மற்ற நாடுகளுக்கு விமானங்களை இயக்கியுள்ளது. லெபனான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்புக்குள்ளான முதல் நபர்கள் ஈரானின் மஹான் ஏர் விமான நிறுவனத்தின் விமானங்களில் பயணம் மேற்கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலமே அந்த நாடுகளில் கொரோனா வேகமாக பரவியுள்ளது. லெபனானில் 700க்கும் அதிகமானவர்களுக்கும் ஈராக்கில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

விமான ஊழியர்களின் எச்சரிக்கையையும் மீறி நிறுவனம் அவர்களை கட்டாயப்படுத்தி பணி செய்ய வைத்ததாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து தடையை மீறி மஹான் ஏர் நிறுவனம் எப்படி விமானங்களை இயக்கியது என ஈரான் அரசு விசாரணையை தொடங்கியுள்ளது