குவைத் மீது தாக்குதல் afp
உலகம்

7ஆவது முறை.. குலை நடுங்கி நிற்கும் குவைத்.. தொடர் தாக்குதலில் ஈரான்!

கடந்த இரண்டு வாரங்களில் குவைத்தின் முக்கிய இடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

Prakash J

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலில், குவைத் நாட்டின் மிக முக்கிய பொது உள்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டு 7ஆவது முறையாகத் தாக்கப்படுவது சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியக் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதல், ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈரான் கடுமையான இழப்பைச் சந்தித்திருந்தாலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்குச் சொந்தமான ராணுவத் தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. இந்த நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையம் மீது இந்தப் போர்தொடங்கியதில் இருந்து தற்போது 7-ஆவது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குதலில் விமான நிலையத்தின் எரிபொருள் தொட்டி தீப்பிடித்து எரிந்தது. அந்தத் தீயை அணைக்க சிவில் பாதுகாப்புப் படையினருக்கு சுமார் 58 மணிநேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு வாரங்களில் குவைத்தின் முக்கிய இடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

குவைத் மின் உற்பத்தி நிலையம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், துறைமுகங்கள், கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் ஆபத்து மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருதி, குவைத் தேசிய வங்கி இன்றும் நாளையும் மூடப்படுவதாக அறிவித்துள்ளது. குடிநீர் மற்றும் மின்சார உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்குப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். குவைத்தின் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் மீதான தாக்குதலால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. குவைத்தில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

குவைத் கப்பல்

அங்குள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வருவதிலும், அங்கிருந்து வரும் எரிபொருள் விநியோகத்திலும் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குவைத்தில் போர்ச் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது. இது உலக எரிசக்தி சந்தையில் ஏற்கனவே நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், பஹ்ரைன், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளிலும் ஈரான் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நேற்று காலை ஏமனிலிருந்து பாய்ச்சப்பட்ட ஏவுகணையை தங்கள் நாட்டு ராணுவ அமைப்புகள் தடுத்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்காசிய போர் 2ஆவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேல் மீது ஈரான், ஹிஸ்புல்லா, ஹவுதி அமைப்பினர் இணைந்து ஏவுகணை தாக்குதல் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.