செய்தியாளர் - M.மீரா
அமெரிக்கா -ஈரான் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில். ஈரான் மீது அமெரிக்கா அணு ஆயுதத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற விவாதங்கள் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, ஈரானின் நிலத்துக்கு அடியில் அமைந்துள்ள அணுசக்தி மையமான பிகாக்ஸ் மவுண்டன் (Pickaxe Mountain) மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த அணு சக்தி மையத்தை அழிக்க ராணுவ நடவடிக்கை எடுக்கலாம் என்று ட்ரம்பின் முன்னாள் ஆதரவாளரும் அமெரிக்க ஊடகங்களில் பிரபலமானவருமான டக்கர் கார்ல்சன் தெரிவித்துள்ளார். ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டும் பணிகளைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை நம்புவதாகவும், அந்த மையத்தை அழிக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அணுசக்தி மையம் சுமார் 300 அடி ஆழத்தில் பாறைகளுக்கு அடியில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அமெரிக்காவின் சக்திவாய்ந்த பதுங்குக் குழிகளை அழிக்கும் குண்டுகளால்கூட அந்த மையத்தை முழுமையாக அழிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் காரணமாக அணு ஆயுதத்தைப் பயன்படுத்துவது குறித்தும் விவாதங்கள் நடைபெறுவதாக டக்கர் கார்ல்சன் குற்றம்சாட்டியுள்ளார். எனினும், இது தொடர்பாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தச் சூழலில், அணு ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டால் மக்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை ஈரான் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது. அணு ஆயுதத் தாக்குதல் குறித்த அச்சம் ஈரானில் அதிகரித்துள்ளதையே இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.
ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ள வீடியோவில், அணுகுண்டு வெடித்தால் முதல் சில நொடிகளில் மக்கள் என்ன செய்ய வேண்டும், கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து எவ்வாறு தப்பிக்க வேண்டும், பாதுகாப்பான இடங்களில் எப்படித் தங்க வேண்டும் போன்ற அறிவுறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, ஈரான் தனது அணுசக்தி மையங்களைச் சுற்றி மண் தடுப்புகளை அமைத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் ஆகியவற்றிலும் போர்க்கால பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை சமீபத்தில் சுமார் 30 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ஷாஹெட் ரக ட்ரோன்களைப் பயன்படுத்தி ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.