Strait of Hormuz  X
உலகம்

1980களின் தோல்வியை மறந்துவிடாதீர்கள்.. அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் கடற்கரைகளையும் தீவுகளையும் தாக்கினால், பாரசீக வளைகுடா முழுவதும் கடற்படைக் கண்ணிவெடிகள் பதிக்கப்படும் என்று ஈரான் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

PT WEB

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது பிரதேசம் தாக்குதலுக்கு உள்ளானால் கடலில் கண்ணிவெடிகளை பதிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 1980களின் தோல்வியை மறந்துவிடாதீர்கள் என அமெரிக்காவுக்கு பாடம் புகட்டும் நோக்கில், பாரசீக வளைகுடா முழுவதும் கடற்படை கண்ணிவெடிகள் நிலைநிறுத்தப்படும் என அறிவித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தனது பிரதேசம் நேரடித் தாக்குதலுக்கு உள்ளானால் பதற்றம் பெருமளவில் அதிகரிக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. திங்களன்று விடுத்த கடுமையான எச்சரிக்கையில், அந்நாட்டின் கடற்கரை அல்லது தீவுகள் மீது எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட்டால், பாரசீக வளைகுடா முழுவதும் கடற்படை கண்ணிவெடிகள் நிலைநிறுத்தப்படும் என்று கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் - அமெரிக்க, இஸ்ரேலிய படைகளுக்கும் இடையே நடைபெறும் போர் 4ஆவது வாரமாக தொடரும் நிலையில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெரிய பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

US - Iran

போரின் தொடக்கத்தில் ஈரானால் இந்தப் போரில் வீரியமாக பதிலடி கொடுக்க முடியாது என்று பேசப்பட்டது. பலமான நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற சக்திகளுக்கு எதிராகப் பலவீனமான தரப்பான ஈரான், மரபுசாரா போர் முறைகளைக் கையாண்டு, முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து எதிரிகளுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தி போரில் நிலைத்து நிற்கிறது.

இதனைத் தொடர்ந்து 48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் தெஹ்ரான் முழுமையாகத் திறக்கத் தவறினால், ஈரானிய மின் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படும் என்று சனிக்கிழமையன்று ட்ரம்ப் எச்சரித்திருந்தார். அதற்குப் பதிலடியாக அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு மின்சாரம் வழங்கும் மத்திய கிழக்கு மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் திங்களன்று அச்சுறுத்தியது

Strait of Hormuz

இருந்தாலும் எதிரி நாடுகளின் கப்பலைத் தவிர பிற நாட்டுக் கப்பல்கள் கடந்துபோகலாம் என்று அனுமதி அளித்தது ஈரான். இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் மீண்டும் திறக்குமாறு தெஹ்ரானுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில், அந்நாட்டின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை ஆக்கிரமிக்க அல்லது முற்றுகையிட அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானுக்கு விதித்த 48 மணி நேர காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், ஈரானின் கடற்கரைகள் அல்லது தீவுகள் மீது தாக்குதல் நடத்த ஏதேனும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால், வளைகுடாவில் உள்ள அனைத்து அணுகு வழிகளிலும், கடற்கரையிலிருந்து விடுவிக்கப்படக்கூடிய மிதக்கும் கண்ணிவெடிகள் உட்பட பல்வேறு வகையான கடல் கண்ணிவெடிகள் பதிக்கப்படும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Kharg Island, Iran

மேலும் அந்த அறிக்கையில், 1980களில் சில கடல் கண்ணிவெடிகளை அகற்றுவதில் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடி அகற்றும் கப்பல்கள் தோல்வியடைந்ததை மறந்துவிடக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1980களில், குறிப்பாக ஈரான்-ஈராக் போரின்போது, பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்தைத் தடுக்க கண்ணிவெடிகள் (mines) பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. ஈரான் தனது சிறிய படகுகள் மற்றும் Silkworm ஏவுகணைகளைப் பயன்படுத்தி எண்ணெய் டேங்கர்களைத் தாக்கியது. இந்த மோதலில், மூன்று தலைமுறை நீர்மூழ்கிக் கண்ணிவெடிகள் (limpet mines) பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.