காலிபாப் - ட்ரம்ப் X
உலகம்

”எங்களால் முடியாவிட்டால்; யாராலும் முடியாது” - அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை!!

எங்களால் எண்ணெய் விற்க முடியாத பட்சத்தில்; வேறு யாரையும் விற்க விட மாட்டோம் என ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான முகமது பாகர் காலிபாஃப் எச்சரித்துள்ளார்.

Premkumar S

ஈரான் - அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஜூலை 7-ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. தற்போது 12-வது நாளாக இரு நாடுகளுக்கு இடையேயும் பரஸ்பர தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. குறிப்பாக, ஈரானின் அணு மற்றும் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை குறிவைத்தும் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்தும் ஈரான் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

ஹார்முஸ்

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்த உலகளாவிய எண்ணெய் வர்த்தகம், தற்போது, ஹார்முஸ் நீரிணையை சுற்றியுள்ள பதற்றம் காரணமாக மீண்டும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்தச் சூழலில் தான், ஹார்முஸில் வர்த்தக கப்பல்களை ஈரான் தாக்கும் ஒவ்வொரு நேரமும், அந்நாட்டின் பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி அழிக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடக பக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் தான், ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்த சில மணி நேரங்களிலேயே ஈரான் கடுமையான எதிர்வினையாற்றியிருக்கிறது. இதுகுறித்து ஈரான் நாடாளுமன்ற சபாநாயகரும் அமைதிப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான முகமது பாகர் காலிபாஃப் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், எங்களால் எண்ணெய் விற்க முடியாத பட்சத்தில்; வேறு யாரையும் விற்க விட மாட்டோம். இந்தப் போரின் கணக்கு மிகவும் தெளிவானது; எல்லோருக்கும் அல்லது யாருக்கும் இல்லை (EITHER ALL OR NONE) என தெரிவித்திருக்கிறார்.

காலிபாப்

மேலும், ஹார்முஸ் நீரிணையின் நிலை, போருக்கு முந்தைய இயல்பு நிலைக்குத் திரும்பாது என்றும், ஈரானின் பாதுகாப்பு உறுதி செய்யப்படாவிட்டால், பிராந்தியத்தில் எந்த முக்கிய உள்கட்டமைப்பும் பாதுகாப்பாக இருக்காது என்றும் காலிபாப் எச்சரித்துள்ளார்.

இவ்வாறு, இரு நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நுழைவாயிலான ஹார்முஸ் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.