அமெரிக்கா-ஈரான் போர் 7 மாதங்களாக நீடித்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், அமெரிக்கா போருக்கான செலவுகளை வெனிசுலா எண்ணெய் மூலம் ஈடுகட்டியதாக ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.
செய்தியாளர் - M.மீரா
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் 7 மாதங்களை கடந்தும் நடந்து வருகிறது. உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.
இந்தப் போருக்கான செலவு 47 பில்லியன் டாலர்களைக் (இந்திய மதிப்பில் ரூ4 லட்சம் கோடி) கடந்துள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் (Pentagon) நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து ஈரான் உடனான போருக்காக அமெரிக்கா செலவிட்ட பணத்தை, வெனிசுலாவிலிருந்து கிடைத்த கச்சா எண்ணெய் மூலம் பல மடங்கு ஈடுகட்டிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா அவசரப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், ஈரான் போருக்காக அமெரிக்கா பெரிய அளவில் பணம் செலவிடவில்லை என்று தெரிவித்தார். மேலும், இந்தப் போருக்காக செலவிட்ட தொகையை விட வெனிசுலா மூலம் கிடைத்த வருவாய் பல மடங்கு அதிகம் என்றும் கூறினார்.
நாங்கள் செலவிட்ட பணத்தை வெனிசுலா மூலம் பத்து மடங்கு ஈடுகட்டிவிட்டோம். எனவே, போர் செலவு எங்களுக்கு பெரிய சுமையாக இல்லை” என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். ஆனால், இதற்கு ஆதாரமாக எந்தவிதமான கணக்குகளையும் அவர் வெளியிடவில்லை.
2026 ஜனவரி மாதம் வெனிசுலாவில் அமெரிக்கா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு, வெனிசுலா நாட்டின் தலைவர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியின் மீது அமெரிக்கா பொருளாதார மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. இதை "உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம்" என்று ட்ரம்ப் வர்ணித்திருந்தார்.
இதற்கிடையே, வெனிசுலா அமெரிக்காவுக்கு 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை வழங்கியதாகவும், இதற்காக அமெரிக்க வரிப்பணம் எதுவும் செலவாகவில்லை என்றும் ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார்.
மேலும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து ஆர்வம் காட்டுவதாகவும், ஈரானில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினருக்குக் கூட ஊதியம் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டினார்.