2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்துக்கான தடை உலகளவில் பெரும் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
2024–25ஆம் ஆண்டில், சுமார் ரூ.50,000 கோடி மதிப்புள்ள அதாவது, சுமார் 60 லட்சம் டன் பாசுமதி அரிசியை இந்தியா ஏற்றுமதி செய்தது, இதில் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு மேற்கு ஆசியாவிற்கு அனுப்பியது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் முதலிய நாடுகள் இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பங்களிக்கின்றன. அரசு புள்ளிவிவரங்களின்படி, பாஸ்மதி அரிசிக்கான இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஈரான் இருந்தது.
இந்நிலையில், ஈரான் போரின் காரணமாக 2026-ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இந்தியாவின் பாசுமதி அரிசி ஏற்றுமதி சரிவடைந்துள்ளது. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருவதால் கப்பல் காப்பீடு மற்றும் சரக்குக் கட்டணங்கள் உயர்ந்துள்ளன என்றும் சுமார் 4 லட்சம் டன் இந்திய பாசுமதி அரிசி தேங்கிக் கிடக்கிறது என்றும் தரவுகள் கூறுகிறது.
கிட்டத்தட்ட 90 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல் இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால அரிசி வர்த்தகத்தை அச்சுறுத்தியதால் வர்த்தகம் ஸ்தம்பித்து, ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்றுமதி தேக்கத்தால், அறுவடை செய்யப்பட்ட அரிசியை விற்க முடியாமல் வியாபாரிகளும் விவசாயிகளும் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும், மோதல் காரணமாக பாசுமதி அரிசி வாங்குபவர்களும் ஏற்றுமதியாளர்களும் புதிய ஒப்பந்தங்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.