Odyssey  AI
உலகம்

ஈரான் போர் எதிரொலி! நடுக்கடலில் முடங்கிய சொகுசு கப்பல்… 350 பேர் தவிப்பு!

ஈரான் போர் தாக்கம்: நடுக்கடலில் முடங்கிய சொகுசு கப்பல், பயணிகள் துயரத்தில்!

PT WEB

செய்தியாளர் - M.மீரா

உலகம் முழுவதையும் கடல் வழியாக சுற்றி வரும் கனவோடு புறப்பட்ட அமெரிக்காவின் பிரபல குடியிருப்பு சொகுசு கப்பலான எம்.வி. ஒடிஸி (MV Odyssey), கடுமையான நிதி நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக தனது பயணத்தை பாதியிலேயே நிறுத்தியுள்ளது. இதனால் கம்போடியாவின் சிஹானுக்வில் (Sihanoukville) துறைமுகத்தில் இக்கப்பலில் பயணித்த 203 பயணிகளும் 156 ஊழியர்களும் நடுவழியில் தவித்து வருகின்றனர்.

புளோரிடாவைச் சேர்ந்த 'வில்லா வி ரெசிடன்ஸ் (Villa Vie Residences) என்ற நிறுவனம், கடலிலேயே நிரந்திரமாக வசிக்கும் புதிய சிந்தனையுடன் இந்த 3 ஆண்டுகால உலக சுற்றுப்பயணத்தை இயக்கி வந்தது. பெல்ஃபாஸ்டில் இருந்து கடந்த 2024 அக்டோபரில் இந்த சொகுசு கப்பல் புறப்பட்டது. இதில் பயணித்த பல ஓய்வூதியதாரகளும் , கணினி ஊழியர்களும் தங்கள் வாழ்நாள் சேமிபை முதலீடு செய்து , சுமார் 2,30,000 டாலர்கள் வரை கொடுத்து இந்தக் கப்பலில் அரைகளை வாங்கியிருந்தனர்.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் காரணமாக, உலகின் முக்கிய கடல் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.

ஆசிய பிராந்தியத்தில் சொகுசு கப்பலின் மாதாந்திர எரிபொருள் செலவு, ஒரு அறைக்கு வழக்கமாக இருக்கும் $1,800-லிருந்து (சுமார் ₹1.51 லட்சம்) திடீரென $6,000 முதல் $8,000 (சுமார் ₹5.04 லட்சம் - ₹6.72 லட்சம்) வரை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் ஏற்பட்ட தொடர் நஷ்டத்தையும் நிதிச் சுமையையும் தாங்க முடியாமல் நிறுவனம் கப்பல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

Odyssey

கடந்த அக்டோபர் 23 அன்று கம்போடியா வந்தடைந்த இக்கப்பலில் இருந்து, வெறும் 7 மணி நேர முன்னறிவிப்பில் பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதனால் மாற்று தங்குமிடம் மற்றும் அடுத்தகட்ட பயண ஏற்பாடுகளை செய்ய முடியாமல் முதியவர்கள் பலர் தவித்து வருகின்றனர். பயணிகளுக்குத் தங்குவதற்கான உதவிகளை நிறுவனம் சரியாகச் செய்து தரவில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். தற்போது, தனது வணிகத்தைத் தொடர்ந்து நடத்துவதற்கான வழிகளை ஆராய்ந்து, நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியில் கப்பல் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.