oil barrel  reuters
உலகம்

3 பில்லியன் பேரல் பாதிப்பு.. எண்ணெய் சந்தையை உலுக்கிய ஈரான் போர்!

ஈரான் போரால் எண்ணெய் சந்தையில் 3 பில்லியன் பேரல் விநியோகம் பாதிப்பு!

PT WEB

செய்தியாளர் - M.மீரா

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரால் உலகளாவிய எரிசக்தி சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சவுதி அராம்கோ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) தெரிவித்துள்ளார். இந்தப் போரால் சுமார் 3 பில்லியன் பேரல் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Amin Nasser

சவுதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) அமீன் நாசர் (Amin Nasser), மத்திய கிழக்கில் நிலவும் போர் மற்றும் பிராந்திய பதற்றங்கள் காரணமாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் சுமார் 3 பில்லியன் (300 கோடி) பேரல் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. இது, இந்த வழித்தடங்கள் வழியாக வழக்கமாக அனுப்பப்படும் கச்சா எண்ணெயில் பாதியளவு ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நெருக்கடியிலும் அராம்கோ நிறுவனம் தனது மாற்று வழியான 'கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை' (East-West Pipeline) முழு திறனுடன் பயன்படுத்தி செங்கடல் வழியாக விநியோகத்தைத் தொடர்வதால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு $200 என்ற நிலையை எட்டாமல் தடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்கால பாதிப்புகளைத் தவிர்க்க சவுதி அரேபியாவுக்கு வெளியேயும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து தனது எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளை (Stockpile) விரிவுபடுத்த அராம்கோ திட்டமிட்டு வருகிறது.

Saudi's Aramco

இந்த விநியோகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உலகளாவிய வணிக எண்ணெய் இருப்புகளில் இருந்து 1 பில்லியன் (100 கோடி) பேரல்களுக்கும் அதிகமான எண்ணெய் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுவிட்டது.

இதனால், உலக நாடுகளிடம் இருக்கும் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இருப்பு மிகவும் அபாயகரமான நிலைக்குக் குறைந்துள்ளது. தற்போது உலகளவில் கையிருப்பில் உள்ளதாகக் காட்டப்படும் புள்ளிவிவரங்களில் 10%க்கும் குறைவான எண்ணெயை மட்டுமே அவசரத் தேவைகளுக்கு நடைமுறையில் பயன்படுத்த முடியும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

இக்கட்டான இந்த போர்ச் சூழலிலும் சவுதி அராம்கோ நிறுவனம் தனது மாற்று வழித்தடமான 'கிழக்கு-மேற்கு குழாய் வழித்தடத்தை' (East-West Pipeline) முழுமையாகப் பயன்படுத்தி நாளொன்றுக்கு 70 லட்சம் பேரல் வரை எண்ணெயை வெற்றிகரமாக ஏற்றுமதி செய்து வருகிறது. எண்ணெய் விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ளதால், அராம்கோ நிறுவனம் பில்லியன் கணக்கில் லாபத்தையே ஈட்டி வருகிறது