Trump & Pete Hegseth  Reuters
உலகம்

ஈரான் போர் அமெரிக்க ராணுவத்தை அழித்தது எப்படி?

பீட் ஹெக்செத் பாதுகாப்பு செய்லாளர் பதவி ஏற்ற பின் 21 உயர்பதவி ராணுவ, சிவில் அதிகாரிகள் நீக்கக் செய்யப்பட்டுள்ளனர் அல்லது வெளியேற்றப்பட்டுள்ளனர். காரணம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

PT WEB

ஈரான் போரின் ஏழாவது மாதத்தில் அமெரிக்க ராணுவத் தலைமையகம் கடும் அதிர்ச்சியில் உள்ளது. பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் காலத்தில் 21 உயர்பதவி ராணுவ, சிவில் அதிகாரிகள் நீக்கம், விலகல், பதவி உயர்வு தடை போன்ற காரணங்களால் பென்டகனில் அனுபவம், தொடர்ச்சி, பன்முகத்தன்மை குறைந்து, அமெரிக்காவின் ஆயுத இருப்பு, உலகளாவிய ராணுவத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

செய்தியாளர் - M. மீரா

அமெரிக்காவின் போருக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அதிகாரிகள் பென்டகனை (pentagon) விட்டு வெளியேறி வருகின்றனர்; தற்போதைய ஈரான் போர் அமெரிக்காவின் ஆயுத இருப்பைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் பதவிக்காலத்தில் இதுவரை 21 மூத்த ராணுவ மற்றும் சிவில் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர், வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது தாங்களாகவே பதவி விலகியுள்ளனர்.

Pete Hegseth

அமெரிக்காவின் கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் முதல் கடற்படை செயல்பாட்டுத் தலைவர், விமானப்படைத் தலைவர், தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் பாதுகாப்பு உளவுத்துறை முகமையின் இயக்குநர்கள், அமெரிக்கத் தெற்குப் படைப்பிரிவின் தளபதி, ராணுவத் தலைவர் மற்றும் ராணுவம் மற்றும் கடற்படைச் செயலாளர்கள் எனப் பலரும் ஹெக்செத் மூலம் வெளியேற்றப்பட்டனர் அல்லது விலகினர். நேட்டோ செயல்பாடுகள், ராணுவ உளவுத்துறை, இணையவழித் திறன் மற்றும் அமெரிக்காவின் உலகளாவிய படை நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்காணிக்கும் உயர் பதவிகளை வகித்தவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

மிகச் சமீபத்திய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தத்தாக பார்க்கப்பட்டது ராணுவச் செயலாளர் டான் ட்ரிஸ்கோல் அவர்களின் பதவி விலகல்தான் . ராணுவத்தின் மூத்த சிவில் அதிகாரியாக வெறும் 18 மாதங்கள் மட்டுமே பணியாற்றிய அவர் பதவி விலகினார்.

மூத்த ராணுவத் தளபதிகளை ஹெக்செத் நீக்கியதை ட்ரிஸ்கோல் (Dan Driscoll )எதிர்த்தார்; இவ்வாறு அதிகாரிகளை வெளியேற்றுவது படையை நவீனமயமாக்கும் முயற்சிகளைப் பாதிப்பதாக எச்சரித்தார். குறிப்பாக, ராணுவத் தலைவர் ஜெனரல் ராண்டி ஜார்ஜ் மற்றும் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் உக்ரைன் போரிலிருந்து பெறப்பட்ட பாடங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ராணுவத்தை மறுசீரமைப்பதில் ஈடுபட்டிருந்த பிற தளபதிகள் நீக்கப்பட்டது குறித்து அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

Dan Driscoll

தி அட்லாண்டிக்' இதழின் தகவலின்படி, ட்ரிஸ்கோல் இறுதியில் அந்தக் கவலைகளை நேரடியாக டொனால்ட் டிரம்பிடம் தெரிவித்தார். சில நாட்களுக்குப் பிறகு, ட்ரிஸ்கோல் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

பதவி உயர்வு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அல்லது பெண்கள் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இது பன்முகத்தன்மைக்கு எதிரான நடவடிக்கையாகவும் பார்க்கப்படுகிறது

தற்போது ராணுவம், செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட செயலாளர் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட சீருடை அணிந்த ராணுவத் தலைவர் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. ஹெக்செத் பதவியேற்றபோது 10 ஆக இருந்த, பணியில் இருக்கும் இராணுவ நான்கு நட்சத்திர ஜெனரல்களின் எண்ணிக்கை இன்று ஐந்தாகக் குறைந்துள்ளது.

Trump

இந்த நீக்கங்களை ஹெக்செத் அவசியம் என்று கூறுகிறார். ஆனால், அனுபவம் வாய்ந்த தளபதிகள் ஏன் சேவை செய்யத் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டனர் என்பதைப் பொதுவில் விளக்காமல் அவர்களை மீண்டும் மீண்டும் நீக்குவது தேவையற்றது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பீட் ஹெக்செத்தின் இந்த செயலுக்கு குடியரசுக் கட்சியினர் கூட எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்கா ஈரான் போரின் ஏழாவது மாதத்தில் நுழையும் வேளையில் இந்தக் கொந்தளிப்பு அரங்கேறி வருகிறது.