அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இந்த நிலையில், அணு ஆயுத உற்பத்தியை ஈரான் அதிகரித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அதிபர் ட்ரம்ப், அவர்களுக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அணு ஆயுத உற்பத்தி பற்றிய குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், ஒப்பந்தத்தை புதுப்பிக்க முயற்சிகள் எடுத்து வருவதாகக் கூறியிருந்தது.
இந்த நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பதைத் தடுக்கும் விதமாக புதிய ஒப்பந்தத்தைக் கொண்டுவருவதற்கு பேச்சுவார்த்தை நடத்த டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தி, ஈரானுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
ட்ரம்பின் இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஈரான் அரசு, “அமெரிக்கா உத்தரவுகளை வழங்குவதையும் அச்சுறுத்தல்களை விடுப்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் உங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்” என பதிலடி கொடுத்திருந்தார். இதன்மூலம் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதில் உறுதியாக உள்ளது. அதுமட்டுமின்றி, அணு ஆயுதம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளது. என்றாலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இதுதொடர்பாக இரண்டு மாத கால அவகாசம் அளித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தையை மறுத்தால் கடுமையான தடைகள் மற்றும் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்திருந்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில், நூற்றுக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை, ராணுவம் சேமித்து வைத்துள்ள வீடியோவை ஈரான் அரசு வெளியிட்டிருந்தது. 'ஏவுகணை நகரம்' தொடர்பான 85 வினாடிகள் ஒளிபரப்பாகும் அந்த வீடியோவில், அந்நாட்டின் ராணுவ பலத்தைக் காட்டுவதாக அமைந்திருந்தது.
இந்த நிலையில், ”ஈரான் மீது இராணுவ நடவடிக்கை என்ற எச்சரிக்கையை அமெரிக்கா பின்பற்றினால், ஈரான் அப்பகுதியில் உள்ள அமெரிக்க தளங்களைத் தாக்கும்” என அந்த நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “ஈரானின் புனிதத்தை அமெரிக்கா அழிக்க முயன்றால், பிராந்தியம் முழுவதும் வெடிமருந்துக் கிடங்கில் ஒரு தீப்பொறி போல வெடித்துச் சிதறும். அவர்களின் இராணுவ தளங்களும், அவர்களின் கூட்டாளிகளின் தளங்களும் பாதுகாப்பாக இருக்காது” என எச்சரித்துள்ளார்.
முன்னதாக வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்கி, ”அமெரிக்கா தனது அதிகபட்ச அழுத்தமளிப்பது என்ற கொள்கையை மாற்றாவிட்டால் பேச்சுவார்த்தை சாத்தியமல்ல. ட்ரம்பின் கடிதத்தை ஈரான் முழுமையாக ஆராய்ந்து, ஓமன் வழியாக பொருத்தமான பதிலை அனுப்பியுள்ளது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.