ஈரான் அச்சுறுத்தல் தீவிரமான நிலையில், நேட்டோ உச்சி மாநாட்டில் பங்கேற்க அங்காரா சென்ற டொனால்ட் டிரம்ப், ஊடகங்களுக்கு பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறியதாக காட்டி, பின்னர் Catering Truck மூலம் இரகசியமாக C-32A சிறிய ரக விமானத்திற்கு மாற்றப்பட்டார். கத்தார் வழங்கிய புதிய ஜெட் பாதுகாப்பு குறித்து கேள்விகள் எழ, வெள்ளை மாளிகை அதில் உயர்மட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என விளக்கம் அளித்துள்ளது.
செய்தியாளர்; M. மீரா
ஈரான் நாட்டின் அச்சுறுத்தல் அதிகரித்து வந்த சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் துருக்கியிலிருந்து இரகசியமாக ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து வெளியேறியதாக 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேட்டோ (NATO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, கத்தார் நாடு நன்கொடையாக வழங்கிய புதிய ஜெட் விமானத்தில் டிரம்ப் துருக்கியின் அங்காரா நகருக்குச் சென்றிருந்தார். அந்தப் புதிய விமானத்தின் முதல் சர்வதேசப் பயணமாக அது அமைந்திருந்தது. துருக்கியின் எல்லையை ஒட்டியுள்ள ஈரானுடன் மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், டிரம்ப்பின் இந்தத் பயணம் அமைந்தது.
அங்காராவில் ஊடகக் கேமராக்களுக்கு முன்னிலையில் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறினார். ஆனால், அதன்பின் விமான நிலைய உணவு வழங்கும் லாரி மூலம் இரகசியமாக அழைத்துச் செல்லப்பட்டு அமெரிக்க விமானப்படையின் 'சி-32ஏ' (C-32A) என்ற சிறிய ரக விமானத்திற்கு மாற்றப்பட்டதாக அச்செய்தி கூறுகிறது.
இந்த 'சி-32ஏ' விமானம் பிரிட்டனில் உள்ள RAF மில்டன்ஹால் தளத்தை இரவு சுமார் 10.20 மணியளவில் சென்றடைந்தது. அடுத்த சில நிமிடங்களில், ஊடகத்தினரைச் சுமந்து வந்த பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானமும் அங்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர்களும் வெள்ளை மாளிகை ஊழியர்களும் டிரம்ப் வழக்கமான விமானத்தில் தங்களோடுதான் பயணிக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தவேளையில், விமான நிலைய உணவு விநியோக வாகனம் (Catering truck) மூலம் அவர் இரகசியமாக வேறு விமானத்திற்கு மாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்ட டிரம்ப், "பழைய நினைவுகளுக்காகவே" தான் பழைய ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தைப் பயன்படுத்தியதாகவும், கத்தார் வழங்கிய புதிய விமானத்தை அங்குள்ள அமெரிக்கப் படை வீரர்கள் சுற்றிப் பார்ப்பதற்காக நிறுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த இரகசிய நடவடிக்கை புதிய கத்தார் விமானத்தின் பாதுகாப்பு குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்த வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஸ்டீவ் செங், கத்தார் வழங்கிய விமானத்தில் உயர்மட்டப் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அமெரிக்காவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளக் கிடைக்கும் அனைத்துக் கருவிகளையும் அரசு பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து பென்டகன் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.