சுவிட்சர்லாந்தின் ஈரானிய அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு பேசிய ஜே.டி. வான்ஸ், இந்தப் பேச்சுவார்த்தைகள் பல முனைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், மத்திய கிழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
செய்தியாளர் - m. மீரா
ஈரான் - அமெரிக்கா மோதலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவும் ஈரானும் கடந்த ஜூன் 14ஆம் தேதி ஒப்புக்கொண்டன. இதையடுத்து, 14 அம்சங்கள் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஆகியோர் கடந்த 18ஆம் தேதி பிரான்ஸின் வெர்சாய்ஸ் அரண்மனையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அதாவது அமெரிக்காவும் ஈரானும் அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி ஒப்பந்தத்தை எட்ட ஒப்புக்கொண்டிருந்தன. இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக ஈரானியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் சுவிட்சர்லாந்து சென்றிருந்தார் .
சுவிஸ்ஸின் பர்கன்ஸ்டாக்கில் ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பேசிய வான்ஸ், இந்த விவாதங்கள் பல முனைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும், மத்திய கிழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
லெபனான் மற்றும் ஹார்முஸ் நீரிணை தொடர்பான பெரும் கருத்து வேறுபாடுகள் தூதரக செயல்முறையை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய போதிலும், சுவிட்சர்லாந்தில் நடந்த பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்காவும் ஈரானும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், எதிர்கால ஒத்துழைப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்ததாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களில் நாங்கள் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம், என்று கூறிய வான்ஸ், அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயல்படக்கூடிய ஒரு எதிர்காலத்தை நிர்வாகம் இப்போது காண்பதாகவும் குறிப்பிட்டார்.
லெபனானில் போர்நிறுத்தம் நீடிப்பதை உறுதி செய்வதில் கடந்த சில நாட்களில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளோம்,என்று கூறிய அவர், இத்தகைய ஏற்பாடுகள் பெரும்பாலும் சற்று சிக்கலானவையாக இருக்கக்கூடும் என்பதையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் லெபனானில் நிலவும் நிலையற்ற போர்நிறுத்தத்தைத் தக்கவைப்பது உட்பட, இப்பகுதி முழுவதும் ஒரு முழுமையான போர்நிறுத்தத்தை உறுதி செய்வதில் ட்ரம்ப் நிர்வாகம் உறுதியாக இருப்பதாகவும் வான்ஸ் தெரிவித்துள்ளார்.