அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி அளித்த ஈரான், வளைகுடா ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நரம்பான ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்த வழியாக செல்லும் எண்ணெய் மற்றும் வணிகக் கப்பல்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து உலக பொருளாதாரம் கடும் நெருக்கடியில் சிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு ஈரான் கடுமையான பதிலடி கொடுத்த நிலையில், போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. ஒரு கட்டத்தில் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் இருந்த வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் சரமாரியாக தாக்குதல் நடத்தியது.
இந்த சூழலில் உலக கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் முடக்கி அதில் எந்த கப்பல்களில் செல்ல முடியாத நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்ததோடு, பல்வேறு நாடுகள் பொருளாதார சிக்கலில் சிக்கிக்கொண்டன.
தொடர்ந்து இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகளும் தீவிர முயற்சிகளை எடுத்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் பேரில் இந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதே நேரம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அதில் எந்த உடன்படும் எட்டப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து மிக குறைந்த அளவில் ஹோர்முஸ் நீரிணையில் மீண்டும் போக்குவரத்து தொடர்ந்தது. இந்த சூழலில் கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் ஈரானின் தெற்குப் பகுதியில் உள்ள முக்கியத் துறைமுக நகரான பந்தர் அப்பாஸ் (Bandar Abbas) மீது தாக்குதல் நடத்தி போரை மீண்டும் தொடங்கி வைத்தது.
இதற்கு ஈரான் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்ட நிலையில், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் தாக்கப்பட்டன. அதோடு அமெரிக்காவின் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்றும் ஈரான் ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த நிலையில், போர் தீவிரமடைந்த நிலையில், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.
இந்த பகுதி வழியே எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் வணிகக் கப்பல்கள் உட்பட அனைத்துக் கப்பல்களின் போக்குவரத்தும் தடை செய்யப்படுவதாகவும், அந்த நீரிணை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் தாக்கப்படும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு அது உலகளவில் மீண்டும் ஏரளமான பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்தும் என அச்சம் எழுந்துள்ளது.