Abbas Araqchi Reuters
உலகம்

2 நாட்களில் ஹார்முஸ் நீரிணையை திறப்போம்.. அமெரிக்காவுக்கு ஈரான் வைத்த மெகா செக்!

கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் பாதிப்பு... ஹார்முஸ் நீரிணை விவகாரம் சூடுபிடிக்கிறது!

PT WEB

செய்தியாளர் - M.மீரா

பிப்ரவரி 2026-ல் அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய ஈரான் போரின் காரணமாக, உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதைகளில் ஒன்றாக இருக்கும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்குக் கொண்டு செல்லப்படும் கச்சா எண்ணெயில் 20 % இந்தப் பாதை வழியாகவே செல்கிறது. அமெரிக்கா - ஈரான் போர்காரணமாக இந்தப் பாதை மூடப்பட்டிருப்பது சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

SHIPS IN HORMUZ

ஈரான் தனது நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால், வெறும் 2 நாட்களில் ஹார்முஸ் நீரிணியை சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காக முழுமையாகத் திறந்துவிடத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்று வரும் தீவிர ராஜதந்திரப் பேச்சுவார்த்தையின் விளைவாக, இந்த காலக்கெடு முந்தைய முன்மொழிவுகளில் இருந்த 5 முதல் 7 நாட்களில் இருந்து, தற்போது 2 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தியைத் திறப்பதற்கு முன்பாக அமெரிக்கா சில முக்கியமான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும். மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.

மேலும், ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனைக்கான தடைகளை நீக்குவதுடன், வெளிநாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கத்தாரில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் நிதியையும் விடுவிக்க வேண்டும் என்று அராக்சி தெரிவித்துள்ளார்.

Us warship

இதுமட்டுமின்றி, ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானும் ஓமனும் இணைந்து விவாதித்துள்ள புதிய கப்பல் போக்குவரத்துப் பாதையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், மற்ற பாதைகளை மூட வேண்டும் என்றும் ஈரான் கோரியுள்ளது.

இந்த நிபந்தனைகள் ஏற்கப்பட்டு ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டால், அமெரிக்காவுடன் நிலுவையில் உள்ள மற்ற விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த விவகாரம் அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அமெரிக்கா ஈரானின் அணுசக்தித் திட்டக் குறைப்பை முதன்மையாக வலியுறுத்தி வரும் நிலையில், ஈரான் தனது நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என திட்டவட்டமாக கூறியுள்ளது. அமெரிக்கா இந்த நிபந்தனைகளுக்குப் பணிந்து உலகப் பொருளாதாரத்தைக் காக்குமா அல்லது மீண்டும் ராணுவ மோதலைத் தேர்ந்தெடுக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.