ஈரானின் அணு ஆயுத நிலையங்களை முற்றிலும் தகர்த்துவிட்டோம் என தன் சோஷியல் மீடியாவான ட்ரூத் சோஷியலில் பதிவிட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். அதே சமயம், அணு ஆயுத நிலையத்தில் இருந்து கிட்டத்தட்ட 400 கிலோ யுரேனியத்தை ஈரான் வேறு இடத்துக்கு மாற்றி இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதை செயற்கைக்கோள் புகைப்படங்களும் உறுதி செய்திருக்கின்றன.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘வெற்றி வெற்றி வெற்றி மேல் வெற்றி’ என எம்ஜிஆர் பாணியில் சொல்லிக்கொண்டிருந்தாலும், அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளரான பீட் ஹெக்செத்தும், துணை தலைவரான டேன் கெய்னும் பட்டும் படாமல்தான் இந்த விஷயம் குறித்து பேசி வருகின்றனர். மூன்று அணு நிலையங்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றன என்று மட்டுமே செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்கள்.
ஈரான் மிகவும் ஆபத்தான யுரேனியத்தை குவித்து வைத்திருப்பது ஃபோர்டோ அணு நிலையத்தில்தான். இந்த இடத்தில் தான் 30000 பவுண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. ஃபோர்டோ அணு நிலையம் கடுமையான பாதிப்படைந்திருந்தாலும் முழுமையாக நிர்மூலம் அடைந்துவிடவில்லை என இஸ்ரேல் ராணுவம் செய்தியை கசிய விட்டிருந்தது.
கடந்த சில தினங்களாகவே ஃபோர்டோ அணு நிலையத்தில் வாகன நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும், ஈரான் கிட்டத்தட்ட 400 கிலோ யுரேனியத்தை வேறு இடத்துக்கு மாற்றி இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கின்றனர் இஸ்ரேல் அதிகாரிகள்.
ஈரான் பாராளுமன்ற சேர்மேனின் ஆலோசகரான மெஹ்தி மொஹம்மதி, அமெரிக்காவின் தாக்குதல் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும், பெரிய அளவிலான சேதாரம் எதுவும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு, மூன்று அணு நிலையங்களிலிருந்தும் அதிகாரிகள் முன்னரே வெளியேறிவிட்டனர் என்று தெரிவித்திருக்கிறார் மெஹ்தி மொஹம்மதி. ஜூன் முதல் வாரத்தில் அணு நிலையங்கள் இருந்த நிலையையும், தற்போதைய நிலையையும் அல்ஜஸீரா செய்தி நிறுவனம் புகைப்படங்களாக வெளியிட்டிருக்கிறது. ஜூன் 19 மற்றும் 20 தேதிகளில் பல கார்கோ வண்டிகள் ஃபோர்டோ அணு நிலையத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அங்கிருந்து 1 கிமீ தொலைவுக்கு இந்த வாகனங்கள் சென்றிருக்கலாம் எனும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
ஆக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வழக்கம் போல பேச ஆரம்பித்துவிட்டார். ஆனால், உண்மை வேறாக இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் நக்கல் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். போர் விரைவில் முடிவுற்றால் மட்டுமே, உண்மையில் என்ன நடந்தது என்பதை உலகம் அறிய முடியும்.