ஈரான் போராட்டம் News on Air
உலகம்

ஈரான் | 2 வாரங்களை எட்டிய மக்கள் போராட்டம்... 10,600 பேர் கைது!

ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக வெடித்துள்ள போராட்டம் இரண்டு வாரங்களை கடந்து தீவிரமடைந்துள்ளது.

PT WEB

ஈரானில் பொருளாதாரம் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக டிசம்பர் 28இல் தொடங்கிய போராட்டம், கமேனி ஆட்சி மற்றும் ஊழலுக்கு எதிரான பரந்த போராட்டமாக விரைவாக உருமாறியுள்ளது. போராட்டத்தின் போது நடந்த வன்முறையில் இதுவரை 538 பேர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதில் 48 பேர் பாதுகாப்புப் படையினர். இதுவரை 10,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரான் போராட்டம்

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கடவுளின் எதிரிகள் எனக் கருதப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் ஈரான் அரசு கடுமையாக எச்சரித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ வாய்ப்புகளை பரிசீலித்து வருகிறார். அமெரிக்கா தாக்கினால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீதே தாக்குதல் நடத்துவோம் என ஈரான் நாடாளுமன்றத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. இணைய சேவை முடக்கப்பட்டிருக்கும் சூழலில் ஈரான் அரசின் கடும் நடவடிக்கைக்கு மத்தியிலும் தலைநகர் தெஹ்ரான் மற்றும் மஷ்ஹாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து வருகின்றனர்.