உலகம்

ஹிஜாப் அணிய மறுத்த அமெரிக்க ஊடகவியலாளர்: நேர்காணலை ரத்து செய்த ஈரான் அதிபர்!

JustinDurai

பேட்டி எடுக்கும்போது ஹிஜாப் அணிய மறுத்ததால் அமெரிக்க ஊடகவியலாளர் உடனான நேர்காணலை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ரத்து செய்தார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்கா வந்திருந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியை, சர்வதேச ஊடகவியலாளர் கிறிஸ்டியன் அமன்பூர் நேர்காணல் செய்வதாக இருந்தது. இதற்காக பல வாரங்களாக திட்டமிடப்பட்டு புதன்கிழமை இரவு நேர்காணல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இப்ராஹிம் ரைசி அமெரிக்காவில் கொடுக்கும் முதல் நேர்காணல் இது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தனது நேர்காணலை ரத்து செய்துவிட்டதாகவும், பேட்டி காணும் கிறிஸ்டியன் அமன்பூர், ஹிஜாப் அணிய மறுத்ததே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிறிஸ்டியன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், நியூயார்க்கில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற சட்டமோ வழக்கமோ இல்லை என்றும், இதற்கு முன்பு இருந்த எந்த ஈரானிய அதிபரும் ஈரானுக்கு வெளியே தான் அவர்களை பேட்டி எடுத்தபோதும் ஹிஜாப் அணிய வற்புறுத்தியதில்லை என்றும் கூறியுள்ளார்.

ஈரானில் எல்லா நேரங்களிலும் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும், 7 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தலைமுடியை முழுதும் மறைக்கும் வகையில் கட்டாயம் ஹிஜாப்பை அணிய வேண்டும் என்று அரசு கடுமையான ஆடைக் கட்டுப்பாட்டை விதித்திருக்கிறது. இதன் காரணமாக, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சிக்கு அந்த நாட்டுப் பெண்களும், சமூகச் செயற்பாட்டாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதற்கு மத்தியில் ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் மஹ்சா அமினி என்ற 22 வயது இளம்பெண்ணை கைது செய்த காவல் துறையினர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் கோமா நிலைக்கு சென்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த எதிர்ப்பு போராட்டத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிக்க: ஹிஜாப்’க்கு எதிரான போராட்டத்தில் 31 பேர் மரணம்?