ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு, இந்த மாதம் இறுதிச் சடங்கு நடத்துவதற்கான திட்டங்களை ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரான், அத்துடன் கோம் மற்றும் மஷ்ஹத் உள்ளிட்ட மூன்று நகரங்களில் இந்த நிகழ்வுகள் நடைபெறும் என தெஹ்ரான் துணை மேயர் முகமது அமின் தவாகோலி-சாதே இறுதிச்சடங்கின் ஏற்பாடுகள் குறித்து விவரித்து இருக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில் மூன்று இடங்களிலும் பொது ஊர்வலங்கள் இடம்பெறும் என்று கூறினார்.
தெஹ்ரானில் மட்டும் நடைபெறும் சடங்கு குறைந்தது 24 மணி நேரமாவது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைநகரின் நிகழ்வுகளின்போது 2 கோடி மக்கள்வரை கூடுவார்கள் என அதற்காக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் மற்றும் காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான வெளிநாட்டு மக்களும் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
அலி கமேனியின் மரணத்திற்குப் பல மாதங்களுக்குப் பிறகு இறுதிச்சடங்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இஸ்லாமியப் பாரம்பரியத்தின்படி, அடக்கம் மற்றும் இறுதிச்சடங்குகள் சில நாட்களுக்குள் நடத்தப்பட வேண்டும் என்றாலும், ஈரானிய அதிகாரிகள் முன்னதாக இந்த நிகழ்வுகளை காலவரையின்றி ஒத்திவைத்திருந்தனர். பிப்ரவரி 28 அன்று தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார். இறக்கும்போது அவருக்கு வயது 86.
இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட பெருந்திரளான மக்களை நிர்வகிப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, அது உடனடியாக நடத்தப்படாது என அதிகாரிகள் மார்ச் மாத தொடக்கத்தில் தெரிவித்து இருந்தனர். கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் அயதுல்லா மொஜ்தபா கமேனி அவருக்குப் பின்வருபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவர் அப்பதவியை ஏற்றதிலிருந்து பொதுவெளியில் தோன்றவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.