Marco Rubio, Trump & Pete Hegseth Reuters
உலகம்

ட்ரம்பைக் கொல்ல ஈரான் சதி? ராணுவ தளத்தில் தஞ்சமடைந்த அமெரிக்க அமைச்சர்கள்!

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து வாஷிங்டனில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரேல் உளவுத்துறை எச்சரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் (Mossad), அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளைப் படுகொலை செய்ய ஈரான் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்களைப் (Explosive-laden drones) பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் சி.ஐ.ஏ (CIA) அமைப்பிற்கு ரகசியத் தகவல்களை அளித்து எச்சரித்துள்ளது.

Marco Rubio, Trump & Pete Hegseth

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அதற்குப் பழிவாங்க டொனால்ட் ட்ரம்பை ஈரான் தங்களின் முதன்மை இலக்காக (Target Number One) வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து வாஷிங்டனில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் மற்றும் நிதித்துறை அமைச்சர் போன்ற முக்கிய அதிகாரிகள் தற்காலிகமாக ராணுவ முகாம்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Pete Hegseth

ஈரானின் அச்சுறுத்தல்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் வன்முறை அபாயங்கள் போன்ற தீவிர பாதுகாப்பு காரணங்களால், மார்கோ ரூபியோ (Marco Rubio) மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் (Pete Hegseth) ஆகிய இருவரும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஃபோர்ட் மெக்நாயர் (Fort McNair) என்ற அதிபலத்த பாதுகாப்பு கொண்ட ராணுவ தளத்திற்கு மாற்றப்பட்டு அங்கு வசித்து வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) மற்றும் வெள்ளை மாளிகை தலைமை அதிகாரி ஸ்டீபன் மில்லர் (Stephen Miller) ஆகியோரும் பாதுகாப்பு காரணங்களுக்காக ராணுவ தளங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பொது வெளியில் தோன்றுவது மற்றும் திறந்தவெளி பிரச்சாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன. அவர் பங்கேற்கும் கூட்டங்களில் ட்ரோன்களைத் தடுக்கும் சிறப்புத் தொழில்நுட்பக் கருவிகள் (Anti-drone systems) பயன்படுத்தப்படுகின்றன.

TRUMP

இந்த அச்சுறுத்தல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் தீவிரமாகக் கண்காணித்து உறுதிப்படுத்தியிருந்தாலும், சி.ஐ.ஏ அல்லது வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக இது குறித்து இன்னும் பொதுவெளியில் விரிவான அறிவிப்பை வெளியிடவில்லை. இஸ்ரேலிய ஊடகமான இஸ்ரேல் ஹயோம் (Israel Hayom) மற்றும் சர்வதேச செய்தி நிறுவனங்கள் இந்த முக்கிய உளவுத்துறை எச்சரிக்கையை உறுதிப்படுத்தியுள்ளன. ஈரான் இந்த குற்றச்சாட்டுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டது எனக் கூறி மறுத்துள்ளது.