Houthi Reuters
உலகம்

“October 7- Attack” பாணியில்.. இஸ்ரேல் மீது பலமுனைத் தாக்குதல்.? ஈரானின் அதிரடித் திட்டம்?

2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்றதொரு மிகப்பெரிய, ஒருங்கிணைந்த பல்முனைத் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Premkumar S

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையேயான சமீபத்திய போருக்கு தொடக்கமாக அமைந்தது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல். அன்று ஹமாஸ் தலைமையிலான ஆயுதக் குழுக்கள் கசா எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி தாக்குதலை நடத்தின. அதே நேரத்தில், ஹமாஸ் போராளிகள் காசா இஸ்ரேல் எல்லைப் பாதுகாப்பு தடைகளை உடைத்து, பல இடங்களில் இஸ்ரேலுக்குள் நுழைந்ததுடன் எல்லைக்கு அருகிலிருந்த கிராமங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ராணுவ நிலைகளை கடுமையாகத் தாக்கினர். இந்தத் தாக்குதலில், 1,200 கொல்லப்பட்டதுடன், 250 பேர் பணயக்கைதிகளாக காசாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர்.

ஈரான் - இஸ்ரேல்

இந்தச் சூழலில்தான், மத்தியக் கிழக்கில் தொடர்ந்து நிலவி வரும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைப் போன்றதொரு மிகப்பெரிய பல்முனைத் தாக்குதலை நடத்த ஈரான் திட்டமிட்டு வருவதாகத் இஸ்ரேலின் ‘ஜெருசலேம் போஸ்ட்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதலுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா, ஏமனில் உள்ள ஹவுதி, பாலஸ்தீனத்தின் ஹமாஸ், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள தங்களது ஆதரவுப் படைகளை ஈரான் ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

அதேசமயம், இந்த முறை ஒரே ஒரு முனையில் தாக்குதல் நடத்தாமல், ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்து இஸ்ரேலை தாக்குவதே ஈரானின் நோக்கமாக இருக்கலாம் எனவும் இதற்காக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை எனப்படும் IRGC, தனது ஆதரவு அமைப்புகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியதுடன் தாக்குதலுக்கான கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது. இதற்காக, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் உற்பத்தியையும் ஈரான் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

எனினும், இஸ்ரேல் மீதான ‘அக்டோபர் 7 தாக்குதல்’ பாணியிலான ஈரானின் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இல்லை. ஆனால், இது உண்மையாகும் பட்சத்தில் மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரில் இந்தத் தாக்குதல் மிகப்பெரிய திருப்புமுனையயை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.