Mohsen Paknejad & Masoud Pezeshkian  Reuters
உலகம்

ஹார்முஸ் பதற்றம்.. ஈரான் அமைச்சர் திடீர் ராஜினாமா.. அழுத்தம் கொடுத்த அமெரிக்கா!

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்பனை செய்வதில் ஈரான் சிக்கல்களை எதிர்கொள்கிறது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான மோதல், பொருளாதார நெருக்கடி, எண்ணெய் ஏற்றுமதியில் சிக்கல் என ஈரான் பல்வேறு அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அந்நாட்டின் பெட்ரோலியத் துறை (எண்ணெய்) அமைச்சர் மொஹ்சென் பாக்நெஜாத் (Mohsen Paknejad ) திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக பாக்நெஜாத் தெரிவித்ததாக ஈரான் அதிபர் அலுவலகம் கூறியுள்ளது. கடந்த சில காலமாகவே அவர் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்திருந்ததாகவும், அவருக்கு மாற்றாக ஒருவரைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்றதால் அவரது ராஜினாமா ஏற்கப்படாமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mohsen Paknejad

ஆனால், தொடர்ந்து பதவி விலக விரும்பியதால், அதிபர் மசூத் பெசெஷ்கியான் தற்போது அவரது முடிவை ஏற்றுக்கொண்டுள்ளார். பாக்நெஜாத் பதவியில் ஆற்றிய பணிக்கும் சேவைக்கும் அதிபர் பாராட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, National Iranian Oil Company-யின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹமித் போவர்ட், ஈரானின் புதிய இடைக்கால எண்ணெய் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் எண்ணெய் துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த ஒருவரே தற்போது அமைச்சகத்தையும் கவனிக்க உள்ளார்.

இந்த ராஜினாமா ஈரானின் எண்ணெய் துறைக்கு முக்கியமான காலகட்டத்தில் நடந்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணை தொடர்பான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. உலகின் மொத்த எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயு வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீர்வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.

Masoud Pezeshkian

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் சில கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதாகவும், இதற்கு பதிலாக அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்கு எதிராக கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம், ஈரானின் எஞ்சியுள்ள எண்ணெய் வருவாயைத் தொடர்ந்து குறிவைத்து வருகிறது.

மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் கடற்படை முற்றுகை காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்பனை செய்வதில் ஈரான் சிக்கல்களை எதிர்கொள்கிறது. ராஜினாமாவுக்கு முன்பே, ஈரான் ஏற்கெனவே விற்பனை செய்த எண்ணெய்க்கான வருவாய் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று பாக்நெஜாத் கூறியிருந்தார்.