Masoud Pezeshkian  web
உலகம்

மகிழ்ச்சியில் மக்கள்.. 3 மாதங்களுக்குப் பின் ஈரானில் மீண்டும் இணையச் சேவை!

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்குப் பின் 98% துண்டிக்கப்பட்ட சர்வதேச இணையம், 3 மாத தனிமைப்படுத்தலுக்கு பின் அதிபர் பெசெஷ்கியன் உத்தரவால் மீண்டும் செயல்பட இருக்கிறது.

PT WEB

அமெரிக்கா–இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரானில் சர்வதேச இணையம் 98% வரை துண்டிக்கப்பட்டது. மூன்று மாதங்கள் முழு தனிமைப்படுத்தலுக்குப் பிறகு, அமெரிக்காவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக அதிபர் மசூத் பெசெஷ்கியன் இணையத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர உத்தரவிட்டுள்ளார்.

2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் நாடு முழுவதும் சர்வதேச இணையச் சேவைகளை முற்றிலும் முடக்கியது. இதன்மூலம் உலகளாவிய இணையப் போக்குவரத்து 98% வரை சரிந்து, ஒட்டுமொத்த ஈரானும் இணையச் சேவை இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்டது.

iran war

இந்நிலையில் கிட்டத்தட்ட மூன்று மாத கால இணையத் (internet) தடைக்குப் பிறகு, கடந்த 2026 ஜனவரி மாதத்திற்கு முன்பு இருந்ததைப்போல சர்வதேச இணையச் சேவைகளை (International Internet Access) உடனடியாக பழைய நிலைக்குக் கொண்டுவர ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுடன் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சர்வதேச இணையம் திறக்கப்பட்டாலும், ஈரான் மக்களால் சுதந்திரமாக இணையத்தைப் பயன்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது. சீனாவைப்போல ஈரானும் தங்களது சொந்த தேசிய தகவல் நெட்வொர்க் (NIN - National Information Network) என்ற உள்நாட்டு இணைய அமைப்பை வைத்துள்ளது. இதன் மூலம் யூட்யூப், நெட்ஃபிலிக்ஸ், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட பிரபல தளங்களை அணுக முடியாது. மாறாக உள்நாட்டு தயாரிப்புகளை மட்டுமே அணுக முடியும்.

iran war

ஈரானில் வாழும் மக்களில் சுமார் 80% பேர் தடையை மீறி உலகளாவிய செய்திகளையும், கல்வித் தகவல்களையும் பெற விபிஎன் (VPN) என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், டிபிஐ (DPI - Deep Packet Inspection) எனப்படும் மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் விபிஎன் சேவைகளையும் ஈரான் அரசு முடக்கி வருகிறது. இதனால் பல மடங்கு கூடுதல் பணம் கொடுத்து, அரசின் கண்காணிப்பில் சிக்காத விலையுயர்ந்த விபிஎன் அமைப்புகளை ஈரான் மக்கள் கள்ளச்சந்தையில் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் முழுமையடைந்தால் மட்டுமே ஈரானியர்களுக்கு ஓரளவாவது சுதந்திரமாக இணையத்தை பயன்படுத்த முடியும்.