Natanz Nuclear facility , iran  web
உலகம்

யுரேனியம் தளங்களில் கண்ணிவெடிகளைப் பொருத்திய ஈரான்.. அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் நடக்குமா?

ஈரான் தனது யுரேனியம் தளங்களில் கண்ணிவெடிகளைப் பொருத்தி ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்து வந்தது.

Bushehr Nuclear Power Plant, Iran

அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டு விட்டதாக தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது. ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. பின்பு ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்க இராணுவத்தை அனுப்பும் சாத்தியக்கூறை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

பெரும்பாலான யுரேனியம் மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் அணுசக்தி வளாகத்தின் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைகளுக்குள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மீதமுள்ள பொருட்கள் வேறு சில இடங்களில் வைக்கப்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது. அந்தப் பொருட்களைக் கைப்பற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க ராணுவத் திட்டமிடுபவர்கள் மே மாதத்தில் பரிசீலித்ததாகக் கூறப்பட்டாலும், அது அதிக ஆபத்து நிறைந்தது எனக் கருதி அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

Isfahan Nuclear Technology Center, iran

இந்நிலையில் சனிக்கிழமையன்று, அமைதி ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் ஈரானும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் மின்னணு முறையில் கையெழுத்திடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அதைத் தொடர்ந்து அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

இதற்கிடையே ஈரான் தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு உள்ள முக்கிய இடங்களின் நுழைவாயில்களைச் சுற்றி கண்ணி வெடிகளை புதைத்து பலப்படுத்தியுள்ளது என்று அமெரிக்க உளவுத்துறை கூறியுள்ளதாக சிஎன்என் (CNN) செய்தி வெளியிட்டுள்ளது.

இரு தரப்பினரும் ஒரு ஒப்பந்தத்தை நெருங்கி வரும் நிலையில் இந்த யுரேனியம் மீதான ஈரானின் நகர்வு பல கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு உடன்பாடு எட்டப்பட்டாலும் கூட இந்த புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள், சுமார் அரை டன் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அணுகுவதை மிகவும் கடினமானதாகவும், ஆபத்தானதாகவும், அதிக நேரம் எடுக்கக்கூடியதாகவும் ஆக்கியுள்ளன என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Iran's uranium-enrichment complex at Natanz

தனது உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் (HEU) சில பகுதிகளை அணுக முடியாது அல்லது அவற்றை மீட்டெடுப்பது சாத்தியமற்றது என்று ஈரான் பின்னர் வாதிடக்கூடும் என கூறப்படுகிறது.

அத்தகைய சூழல் ஏற்பட்டால், ஈரான் சமர்ப்பித்த விவரங்களின் முழுமையை சரிபார்ப்பது கடினமாகிவிடும் என்றும், எதிர்காலத்தில் அந்தப் பொருட்களில் சிலவற்றை ஈரான் தன்வசம் வைத்திருக்குமோ என்ற கவலை நீடிக்கலாம் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.

வரும் நாட்களில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் என்றாலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தின் எதிர்காலம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அகற்றுவது குறித்து மேலும் தொழில்நுட்ப ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.