model image AI
உலகம்

குடிநீர் கட்டமைப்புகளைக் குறிவைத்த ஈரான்.. அதிர்ச்சியில் அமெரிக்கா!

அமெரிக்க நகராட்சி குடிநீர் அமைப்புகள் மீது நடத்தப்பட்டிருக்கும் சைபர் தாக்குதல்களால், ஈரான் தொடர்பு குறித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

PT WEB

அமெரிக்க நகராட்சி குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளைக் குறிவைத்து நடந்த சைபர் தாக்குதல்கள் குறித்து FBI, EPA எச்சரிக்கை விடுத்துள்ளன. மினசோட்டாவில் 30-க்கும் மேற்பட்ட நீர் கட்டமைப்புகள் இலக்காகியுள்ளன. நீர் மாசுபாடு ஆதாரம் இல்லை என்றாலும், சில அமைப்புகள் manual இயக்கத்துக்குத் திரும்பியுள்ளன.

செய்தியாளர்; M. மீரா

அமெரிக்காவில் உள்ள நகராட்சி நீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை குறிவைத்து ஹேக்கர்கள், சைபர் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக FBI மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) எச்சரித்துள்ளன. பல நீர்ப் பயன்பாட்டு நிறுவனங்கள் இதுபோன்ற சம்பவங்கள் குறித்து FBI-யிடம் புகாரளித்துள்ளதாகவும், சில தாக்குதல்கள் நீர் செயல்பாடுகளைச் சீர்குலைத்துள்ளதாகவும் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

water facility

மினசோட்டாவில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட நகராட்சி நீர் கட்டமைப்புகள் ஹேக்கர்களின் இலக்காக இருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல்களில் ஈரானிய தலையீட்டின் சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதுவரை எந்தவொரு நபர் அல்லது நாட்டையும் அதிகாரப்பூர்வமாகக் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவிக்கவில்லை.

இந்த சைபர் தாக்குதல்களால் மினசோட்டாவின் குடிநீர் மாசுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், சில தாக்குதல்களில் நீர் அமைப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதாகவும், சில இடங்களில் manual இயக்கத்துக்குத் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் CISA எச்சரித்துள்ளது.

AI

ஹேக்கர்கள் இணையத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட தொலைதூரக் கட்டுப்பாட்டு சாதனங்களை அணுகி, IP முகவரிகள் மற்றும் passwords மாற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் நீர் நிறுவனங்கள் தங்களது கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திறன்களை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த விவகாரம் அமெரிக்க அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மினசோட்டா நிர்வாகத்தின் திறமையின்மையே காரணம் என விமர்சித்தார். ஈரானைக் குற்றம்சாட்டுவதையும் அவர் நிராகரித்தார். ஆனால், மினசோட்டா கவர்னர் டிம் வால்ஸ், இந்தத் தாக்குதலுக்கு யார் காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், நவீன போர் முறையில் சைபர் தாக்குதல்கள் முக்கியப் பங்கு வகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Trump

விஸ்கான்சினிலும் (Wisconsin) இதேபோன்ற அச்சுறுத்தல் இருந்தது குறித்து அதிகாரிகள் நீர் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை நீர் நிறுவனங்கள் மேற்கொள்ள FBI மற்றும் EPA அறிவுறுத்தியுள்ளன. ஈரான் ஆதரவு ஹேக்கர்கள் அமெரிக்காவின் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைக்கக்கூடும் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சம்பவங்கள் அமெரிக்காவின் குடிநீர் பாதுகாப்பு குறித்து புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளன.