27 rajab boat  X
உலகம்

'27 ரஜப்' போர் படகை களமிறக்கிய ஈரான்.. அமெரிக்காவின் சவாலை தகர்க்குமா?

ஈரான் புதிய அதிவேக '27 ரஜப்' (27 Rajab) போர் படகை களமிறக்கிய நிலையில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்காவின் போர்க்கப்பல்களை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

PT WEB

அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தைகள் நின்றுபோன சூழலில், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் நீடிக்கும் வேளையில், ஐஆர்ஜிசி புதிய அதிவேக ‘27 ரஜப்’ போர்படகை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்று அடுக்கு வடிவமைப்பு, குறைந்த ரேடார் அடையாளம், 700 கிமீ தூர ஏவுகணைத் திறன் கொண்ட இந்த சிறு கப்பல், அமெரிக்கப் போர்க்கப்பல்களுக்கு எதிரான ஈரானின் ‘கொசுப் படை’ யுத்தியை வலுப்படுத்தும் ஆயுதமாக பார்க்கப்படுகிறது.

நிரந்தரமாக போரை நிறுத்த அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் இழுபறியாக இருக்கும் வேளையில், புதிதாக வடிவமைக்கப்பட்ட ஆயுதத்தை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), ஈரானின் புரட்சிச் சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வின்போது, "27 ரஜப்" எனப் பெயரிடப்பட்ட, ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஒரு புதிய அதிவேகத் தாக்குதல் படகை அறிமுகப்படுத்தியுள்ளது.

iRGC

பெரிய போர்க்கப்பல்களுக்கு எதிராக, ஆயுதமேந்திய சிறிய படகுகளின் கூட்டத்தைப் பயன்படுத்தும் ஈரானின் நீண்டகாலக் கடற்படை யுத்தியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பல், ஈரான் மோதலின் மையமாக ஹார்முஸ் நீரிணையில் மோதல் நீடிக்கும் நேரத்தில் அறிமுகபடுத்தியுள்ளது ஈரான்.

இந்த சிறிய அளவிலான படகு, மூன்று அடுக்கு வடிவமைப்பைக் கொண்டுள்ளதுடன், 700 கிலோமீட்டர் வரை தாக்குதல் நடத்தக்கூடிய இரண்டு ஏவுகணைகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது . மூன்று மீட்டர் உயரம் வரை எழும் அலைகள் உள்ள கடல் சூழல்களிலும் இந்தக் கப்பலால் இயங்க முடியும் என்றும், இது பாரசீக வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அதிகளவில் நிறுத்தப்படும் என்றும் ஈரானிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதன் குறைந்த ரேடார் அடையாளம், அதிவேகம் மற்றும் நீண்ட தூர ஏவுகணைத் திறன் ஆகியவை, நெரிசல் மிகுந்த வளைகுடா நீர்ப்பரப்புகளில் கண்காணிப்பதற்குக் கடினமாக இருக்கும்போதே, இலக்குகளைத் தாக்க உதவும் என்றும் கூறியுள்ளனர்.

Iran's fast boats

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்திற்கான புதிய விதிமுறையை அமெரிக்கா அறிவித்து, அப்பகுதியில் இயங்கும் ஈரானியப் படகுகள் மீது தாக்குதல்களை நடத்திய சில நாட்களுக்குப் பிறகு, 27 ரஜப் போர் படகை அறிமுகப்படுத்தியுள்ளது ஈரான்.

பல தசாப்தங்களாக, சிறு கப்பல்களுக்கு ஐஆர்ஜிசி கடற்படை பெருமளவில் முதலீடு செய்து வருகிறது. பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்களுடன் போட்டியிட ஒருங்கிணைந்த திரள் தாக்குதல்கள் மூலம் சிறிய வேகமான மற்றும் அதிக ஆயுதம் தாங்கிய கப்பல்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்குவதில் ஈரான் கவனம் செலுத்தி வருகிறது. இதனை இராணுவ ஆய்வாளர்கள் "கொசுப் படை" என்றழைக்கிறார்கள்.

american war ships

கடல் போக்குவரத்து அடர்த்தியாக உள்ள ஹார்முஸ் ஜலசந்தியின் குறுகிய நீர்ப்பரப்புகளுக்கு சிறிய படகுகளே பொருத்தமாக இருக்கும் என்பதே ஈரான் வகுத்து வரும் வியூகம். இந்தச் சிறிய படகுகளைக் கண்டறிவது கடினம் அதனால் இந்தச் சவாலை எதிர்கொள்ள அமெரிக்காவிற்குப் பெருமளவிலான வளங்கள் தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.