ட்ரம்ப் - மொஜ்தபா காமேனி Pt web
உலகம்

’மீண்டும் தாக்குதல் நடத்தினால்..’ கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான்!

போர் நிறுத்தம் நீடித்தாலும் மறைமுக மோதல்கள் தொடர்கின்றன; மீண்டும் தாக்கினால் கற்பனைக்குப் புலப்படாத இடங்களில் தாக்குவோம் என IRGC மிரட்டல் விடுத்துள்ளது.

PT WEB

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்துவருகிறது. மேலும் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தாலும், வளைகுடா முழுவதும் தாக்குதல்களும் மறைமுக மோதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களை மீண்டும் தொடங்குவதற்கான திட்டங்களை அமெரிக்க அதிகாரிகள் தயார் செய்து வருவதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஓர் ஒப்பந்தத்தை நோக்கி தற்போது தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன என்று தன்னிடம் தெரிவித்த பல பாரசீக வளைகுடா நட்பு நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, ஈரான் மீது புதிய தாக்குதல்களைத் தொடங்கும் திட்டங்களைக் கைவிட்டதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

Trump

மேலும் ஈரான் மீது குண்டு வீசுவது குறித்த முடிவை ஒத்திவைப்பதற்கு முன், தான் அந்த முடிவை எடுப்பதிலிருந்து ஒரு மணி நேரத் தொலைவில் இருந்ததாகவும் ட்ரம்ப் கூறியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) ’அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கினால், போரை பிராந்தியத்திற்கு அப்பால் கொண்டு செல்வோம்’ என்று அச்சுறுத்தியுள்ளது. மேலும், ’நீங்கள் கற்பனைகூட செய்ய முடியாத இடங்களில் அவர்களை நசுக்கும் அடிகள் விழும்’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

IRGC

மேலும் நாட்டின் அனைத்துப் போர்த் திறன்களையும் இன்னும் செயல்படுத்தவில்லை என்றும் நாங்கள் போர்க்கள வீரர்கள்; எங்கள் வல்லமையை நீங்கள் போர்க்களத்தில்தான் காண்பீர்கள் என்றும் வெற்று அறிக்கைகளிலோ அல்லது சமூக ஊடகப் பக்கங்களிலோ அல்ல என்றும் ஐ.ஆர்.ஜி.சி எச்சரித்துள்ளது.