Mojtaba Khamenei x page
உலகம்

மொஜ்தபா காமேனி வெளியே வராதது ஏன்? காரணத்தை கூறிய ஈரான்.. பின்னணியில் அமெரிக்காவின் சதித்திட்டம்?

ஈரானின் புதிய அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமேனி பொதுவெளியில் தோன்றாததற்குக் காரணத்தை முதல்முறையாக ஈரான் வெளிப்படையாகக் கூறியுள்ளது.

Praveen Joshva L

ஈரானில் ஆட்சி மாற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டு இஸ்ரேலின் உதவியுடன் அமெரிக்கா, ஈரானின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஈரானின் அதிஉயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார் என்றாலும், அடுத்ததாக அவரின் மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

mojtaba khamenei

ஆனால், அவர் இதுவரை பொதுஇடங்களுக்கோ அல்லது வீடியோ மூலமோ உரையாற்றாத நிலையில், அவர் பற்றி பல்வேறு கேள்விகள் எழுந்தன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டபோது அவருடன் உடன் இருந்த மொஜ்தபாவும் படுகாயமடைந்ததாகவும், இதனால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இதற்கு ஈரான் தரப்பில் பதில் ஏதும் அளிக்கப்படாத நிலையில், தற்போது ஈரானின் உயரிய தலைவர் அலுவலகத்தின் செயலாளர் அயதுல்லா மொஹ்சென் கோமி (Ayatollah Mohsen Qomi) இந்த சர்ச்சைகளுக்கு பதிலளித்துள்ளார். செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், சிலர், உயரிய தலைவர் மொஜ்தபா காமேனியின் உடல்நிலை குறித்துக் கேள்வி எழுப்புகின்றனர் என்றும், இது எதிரிகள் கையாளும் ஒரு தந்திரமாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Ayatollah Mohsen Qomi

மேலும், எதிரிகள் அவர் ஏன் பொதுவெளியில் தோன்றவில்லை? அவர் ஏன் ஒரு காணொளிச் செய்தியை வெளியிடவில்லை? அவரைச் சந்தித்தவர்கள் ஏன் முன்வந்து பேசவில்லை? என்று கேட்க விரும்புகின்றனர் என்றும், இந்தக் கேள்விகளைப் பயன்படுத்தி, எங்களை ஓர் எதிர்வினையை வெளிப்படுத்தத் தூண்டுவதன் மூலம், தங்கள் இலக்குகளை அடைய அவர்கள் முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் மொஜ்தபா காமேனி நலமாக இருப்பதையும், அவர் வெளிப்பட்டால் அதன்மூலம் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதாலேயுமே அவர் இன்னும் பொதுவெளியில் தன்னை வெளிப்படுத்தவில்லை என்று ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.